திமுக தன்னுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்கினால், காங்கிரசில் வரும் விமர்சனங்கள் எல்லாம் அடங்கிவிடும். அதை திமுக உடனடியாக செய்ய வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இன்னும் சீட்டுகள் ஒதுக்குவது தாமதமாகி வருகிறது. இதனால் திமுக கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாடு இது வரை பார்த்திராத ஒரு தேர்தலாக இருக்கும். திமுகவின் வியூகத்தை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. திமுக ஆட்சி கட்சி, பண பலம், கூட்டணி பலம் என்று எல்லாம் இருந்தாலும் வெற்றி அவ்வளவு சுலபமாக இருக்காது. கண்டிப்பாக மிகப்பெரிய போராட்டத்தை நடத்திதான் வெற்றி பெற்றாக வேண்டும். அதிமுக – பாஜக கூட்டணியில் பல்வேறு குளறுபடிகள் இருந்தாலும், விஜய் என்கிற பேக்டர் வந்துள்ளது. அவர் எவ்வளவு வாங்க போகிறார் என்று யாருக்கும் தெரியாது. திமுக எதிர்ப்பு வாக்குகளை விஜய் எவ்வளவு பிரிக்கப் போகிறார். அதிமுக எவ்வளவு பிரிக்கப் போகிறது என்று தெரியவில்லை.

இப்படியான சூழலில் காங்கிரஸ் கட்சி நவம்பரிலேயே பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்ட நிலையில், தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள் என்று காத்திருக்கிறார்கள். காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் ஜோடாங்கர், செல்வப்பெருந்தகை போன்றவர்கள் தங்களை திமுக பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் விஜய் பக்கம்ம போகிறார் என்கிற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. ராகுல்காந்தியை கனிமொழி அமைத்த பிறகு திமுக பேச்சுவார்த்தைக்குழு அமைத்திருக்க வேண்டும். திமுக கூட்டணியில் ஒரு கட்சிக்கு ஒரு இடம் கூடுதலாக கொடுத்தாலும் மற்ற கட்சிகளுக்கும் தர வேண்டிய நிலை ஏற்படும். பேச்சுவார்த்தையை முன்கூட்டியே தொடங்கினால் காங்கிரஸ் அதிக இடங்கள் கேட்டு நெருக்கடி தரும் என்று திமுகவினர் நினைக்கிறார்கள். கூட்டணி பேச்சு வார்த்தைகளை திமுக தொடங்கி இருந்தால் இன்றைக்கு மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி, திருச்சி வேலுசாமி போன்றவர்கள் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

எல்லாம் கூறுவது போன்று விஜய்க்கு இரட்டை இலக்கத்தில் வாக்குகள் கிடைக்காது. வேட்பாளர்கள் போட்ட பிறகு விஜயின் வாக்குகள் குறையும். அப்போது தான் தவெகவின் உண்மையான நிலை தெரியும். 100 தொகுதிகளில் வேண்டுமானால் தவெக வேட்பாளர்கள் போட்டி கொடுக்கலாம். மற்ற 134 தொகுதிகளில் திமுக – அதிமுக வேட்பாளர்களுக்கு மத்தியில் காணாமல் போய் விடுவார்கள். விஜய் திமுகவை தீய சக்தி என்று விமர்சித்த நிலையில் இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாங்கள் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை என்று கூறுகிறார். அது ஏற்புடையதல்ல. திமுக கூட்டணிக்கு பலமாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தால் அது நல்லது அல்ல. திமுக தரப்பில் உடனடியாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும். அப்போது தான் திமுகவும் கூட்டணி கட்சிகளும் ஜெல் ஆகும். 2026ல் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்று திமுகவினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இப்படியான சூழலில் திமுகவின் தலைவர் எப்படி நடக்க வேண்டும் என்று நாம் சொல்ல தேவையில்லை. ஆனால் இந்த விவகாரத்தில் திமுக ஏதோ தயக்கம் காட்டுகிறது. தேமுதிக உள்ளே வருகிறது. அதன் காணமாக நாம் காங்கிரசுக்கு அதிக இடம் தர முடியாது என்கிற எண்ணம் தான் ஏற்பட்டு விட்டதாக தான் நான் பார்க்கிறேன். அவர்கள் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறார்கள். கடந்த முறை ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தால் சில எம்எல்ஏக்கள் கிடைத்திருப்பார்கள். ஆனால் தேமுதிகவுக்கு அது புரியவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


