திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.


திமுக கூட்டணியின் அரசியல் நகவுகள் தொடர்பாக விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்கிற கருத்தை ஒரு காலத்தில் விசிக முன்னெடுத்தது. தற்போது காங்கிரஸ் அதை முன்னெடுத்து வரும் நிலையில், விசிக அதில் இருந்து விலகி விட்டதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது ஒரு ஜனநாயக முழக்கமாகும். ஆனால் அதை எப்படி எழுப்ப வேண்டும்? எங்கே எழுப்ப வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும். திமுக அணி வெறும் விசிக, காங்கிரஸ் மட்டும் இடம்பெற்ற அணி அல்ல.
ஒரு முழக்கத்தை நாம் முன்வைக்கும்போது முதலில் அங்கே ஒரு ஏற்போ, அல்லது ஒரு நெகிழ்வுத்தன்மையோ இருக்க வேண்டும். அதற்கு ஒரு வரவேற்பு இருக்க வேண்டும். இதில் எதாவது திமுக கூட்டணியில் தற்போது உள்ளதா? திமுக அந்த கோரிக்கையை ஏற்கவில்லை. சரி கூட சேர்ந்திருக்கிற 9 கட்சிகளுக்கும் அதில் ஒத்த கருத்து உள்ளதா? வேறு எந்த கட்சியாவது இந்த கோரிக்கையை எழுப்புகிறதா? இந்த கருத்துக்கு கூட்டணிக்குள் ஒத்த கருத்து இல்லை. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது எங்களுடைய முழக்கமாக இருந்தாலும், தற்போது அதை எழுப்பக்கூடிய சூழல் இல்லை.

காங்கிரஸ் முதலில் அந்த முழக்கத்தை எழுப்புவதில் தவறு இல்லை. ஆனால் எங்கே, எப்போது, எப்படி எழுப்ப வேண்டும் என்கிற வரைமுறை அவர்களுக்கும் உள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளுக்கு அதில் உடன்பாடு இல்லா விட்டாலும், காங்கிரஸ் உறுதியோடு இருந்தால் அதை எங்கே பேச வேண்டும்? யார் பேச வேண்டும்? என்று உள்ளது. திமுக கூட்டணியில் 10 கட்சிகளை சேர்த்துக் கொண்டு போக வேண்டும் என்கிறபோது, ஒரு கட்சியில் மட்டும் தொண்டர்கள் முதல் முன்னணி தலைவர்கள் வரை வெளியில் இருந்து ஆட்சியில் பங்கு-.. ஆட்சியில் பங்கு.. என்று பேசினால், திமுக எப்படி அதை எதிர்கொள்வார்கள்? காங்கிரசுடன் மட்டும் அவர்கள் கூட்டணியில் இல்லையே? 9 கட்சிகள் உள்ளனவே. இதில் விசிகவின் நலனைவிட கூட்டணியின் நலன்தான் முக்கியம். கூட்டணியின் நலனைதான் திருமாவளவன் பார்க்கிறார். ஆட்சியில் பங்கு என்பது அமைவதற்கான சூழல் இன்னும் கனியவில்லை என்று பார்க்கிறோம். இப்போது அந்த கோரிக்கையை வைத்து நாம் பேசிக்கொண்டு இருந்தோம் என்றால், அது முதிர்ச்சி அற்ற தன்மை என்று பார்க்கிறோம். கூட்டணியில் எத்தனை தொகுதிகள் பெற வேண்டும் என்பதை தலைவர்கள் பேசி முடிவு எடுப்பார்கள்.

பாமக இடம்பெறுகிற கூட்டணியில், விசிக இருக்காது என்று திருமாவளவன் உறுதிபட கூறியுள்ளார். திமுக, அதிமுக என இரு கூட்டணிகளிலும் விசிக இடம்பெற்றுவிடக் கூடாது என்று மிகப்பெரிய லாபி செய்த கட்சி பாமக. ஆனால் நமக்கு கொள்கை ரீதியாக தான் முரண்பாடு. அதனால் அவர்கள் யார் இடம்பெற்றாலும், அவர்கள் இருக்கும் இடத்தில் விசிக இடம்பெறாது என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். ராமதாஸ் பெறாத பிள்ளை திருமாவளவன் என்றால், எதற்காக அவர் மீது அவதூறு பரப்பினார். நாடக காதல்… நசுக்கும் சட்டம்… இத்தனைக்கும் விசிக தான் காரணம்… என்று ஊராக பரப்புரை செய்தார்களே. அன்றைக்கு இந்த பெறாத பிள்ளையின் மாண்பு தெரியவில்லையா? பெற்ற பிள்ளை இன்றைக்கு பாடம் படித்துக்கொள்ளதால், பெறாத பிள்ளையின் மாண்பு கூடியிருக்கிறது.
நாங்கள் அவர் இன்றைக்கு பாசம் காட்டினார். அன்றைக்கு கோபம் காட்டினார் என்று வைத்து நிலைப்பாட்டை எடுக்க முடியாது. அவர் என்ன கொள்கையை வெளிப்படுத்தினாரோ அதை வைத்துதான் நிலைப்பாட்டை எடுக்கிறோம். பாமகவை சேர்க்கிற விவகாரத்தில் கூட்டணி கட்சிகளுடன் கலந்துபேசி தான் முடிவு எடுக்க முடியும் என்று முதலமைச்சர் சொல்லிவிட்டார். அவ்வளவு ஜனநாயகத்தன்மையோடு எங்கள் கூட்டணி போய்க்கொண்டிருக்கிறது. இதற்குள் புதிய சக்திகள் வர, மேலும் கட்சிகள் வர வாய்ப்புகள் உண்டு. ஆனால் பாமக வருவதற்கு வாய்ப்புகள் இல்லை.

திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்களின் பிரச்சினைகளாக இருந்தாலும், சிறுபான்மையின மக்களின் பிரச்சினையாக இருந்தாலும், விவசாயிகள், பெண்கள் உள்ளிட்ட எந்த தரப்பினரின் பிரச்சினையாக இருந்தாலும் அந்த தரப்புக்கு அந்த தரப்பினர் மட்டுமே பேச வேண்டும் என்பது பெரிய அவலமாகும். இது ஜனநாயக விரோதமாகும். ஒரு அரசின் கவனத்தை திருப்புவதற்கான பொது அழுத்தம் எங்கிருந்தும் வர மறுக்கிறது. அந்த இடத்தில் விசிக நாங்கள் தான் போராடி இந்த அரசை செய்ய வைத்துள்ளோம். திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மிகப்பெரிய சமூக மோதல்கள், வன்முறைகள், துப்பாக்கிச்சூடுகள் இல்லை என்கிற நிலையை எட்டியுள்ளது. விசிக கண்டிக்க வேண்டியதை கண்டிக்கிறோம். சுட்டிக்காட்ட வேண்டியதை சுட்டிக்காட்டுகிறோம். சரிசெய்ய வேண்டியதை சரிசெய்ய சொல்லியுள்ளோம். போராட வேண்டிய இடத்தில் போராடி உள்ளோம்.

பாஜக முன்வைத்த சோசியல் இன்ஜினியரிங் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. பாஜக இஸ்லாமியர்களின் வாக்குகளே வேண்டாம் என்று சொல்கிற நிலைக்கு வந்து விட்டனர். ஆர்.எஸ்.எஸ் மூலம் அவர்கள் 100 ஆண்டுகளாக முன்னெடுத்த இஸ்லாமியர் வெறுப்பு அரசியலில் வெற்றியும் பெற்றுவிட்டார்கள். இது எல்லா இடங்களிலும் எதிரொலிக்க தொடங்கிவிட்டது. இப்படியான சூழலில் இதற்கு நேர் எதிர் அரசியல் செய்கிற கட்சிகள் தான் இஸ்லாமியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும். காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளில் இஸ்லாமியர் பிரதிநிதித்துவம் போதாமையாக உள்ளது. அதேநேரம், சிறுபான்மை மக்களின் கோரிக்கையை நோக்கி நகர்கிறபோது, அதை நிறைவேற்றுவதில் அதிகாரத்தில் உள்ள கட்சிகள் கவனம் செலுத்துகின்றனர்.
சிஏஏ, வக்பு திருத்த சட்டம், முத்தலாக் சட்டம், ஹிஜாப் தடை என்று அவர்களுக்கு பிரச்சினைகள் வருகிறபோது, அதற்கு எதிராக சமர்புரிகிற கடமையை விசிக, காங்கிரஸ், திமுக என்று எல்லோரும் செய்கிறார்கள். ஆனால் அதோடு நிற்கக்கூடாது. அதிகாரத்திலும் இந்த மக்களுக்கு பிரதிநிதித்துவம், பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளால் தான் வழங்க முடியும். எனவே அதை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் வைக்கிறோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


