என்.கே.மூர்த்தி
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தொடர்ந்து தந்தை பெரியாரை இழிவுப்படுத்தி வருகிறார். அதுவும் விமர்சனம் என்ற பெயரில் நாவடக்கம் இல்லாமல் வரம்புகள் மீறி பேசி வருகிறார்.


பெரியார் என்பவர் யார்?
தந்தை பெரியார் என்பவர் யார் என்பதை முதலில் அவரும் அவரை ஏவி விடும் எஜமானர்களும் தெரிந்துகொள்ள வேண்டும்.
தந்தை பெரியார் ஒரு மானுடப் பற்றாளர். அந்த மனித நேயத்தில் இருந்து தான் சமத்துவம், சகோதரர்த்துவம், கருத்து சுதந்திரம், எதையும் ஏன், எதற்கு என்று கேள்விக் கேட்கக்கூடிய ஆழ்ந்த பகுத்தறிவு சிந்தனை தோன்றியது. மனிதநேயத்தை அடிப்படையாக வைத்து சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். பெரியாரின் அடிப்படை நோக்கம் மனிதம், மனிதத் தன்மை, மனித ஒருமைப்பாடு.
உலகில் வேறு எந்த நாடுகளிலும் காணமுடியாத பிறவி பேதம் இந்தியாவில் மட்டுமே இருக்கிறது. பிறவி பேதத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட மனிதர்கள் படிக்கவே கூடாது என்றும் அப்படியே மீறி படித்தால் நாக்கை அறுக்க வேண்டும் என்றும் பெரும்பான்மையான மக்களுக்கு காலா காலமாக உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தது. ஒரு மனிதன் ஏன் தொடக்கூடாதவன்? இன்னொரு மனிதன் எப்படி தொடக்கூடியவன்? ஏன் ஒரு மனிதன் படிக்கக் கூடியவன்- இன்னொரு மனிதன் எப்படி படிக்கக் கூடாதவன். ஏன் பெண்ணுக்கு ஒரு சுதந்திரம், ஆணுக்கு ஒரு சுதந்திரம். சொத்தில் ஆணுக்கு மட்டும் உரிமை உண்டு, பெண்ணுக்கு ஏன் மறுக்கப்பட்டது என்று மனிதத்தை மட்டும் அடிப்படையாக முன் நிறுத்தி சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். மனிதத் தன்மைக்கு எதிராக இருந்த ஒவ்வொன்றையும் நுட்பமாக ஆராய்ந்தார்.
அப்படி ஆராய்ந்து பார்த்ததில், சாதாரண மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சூழ்ச்சி தான் இந்த சாதி, தீண்டாமை, வேற்றுமை என்பதை பெரியார் கண்டுப் பிடித்தார். மனிதனின் சூழ்ச்சியால் ஏற்படுத்தப்பட்ட சாதி வலிமையாகவும், இறுக்கமாகவும் இருப்பதற்கான காரணம் மதமும் கடவுளும் தான் காரணம் என்பதை கண்டுப் பிடித்தார்.
அதாவது பகவத்கீதையில் உள்ள “சதூர்வர்ணம் மயாசிஷ்டம்” என்கிற அத்தியாயத்தில் நாலு சாதிகளை நானே உண்டாக்கினேன். அவரவர் அவரவருடைய சாதி தர்மத்தில் இருந்து மாறக்கூடாது. அதை “நானே நினைத்தாலும் கூட மாற்றமுடியாது” என்று கடவுள் சொல்லி இருப்பதாக எழுதப்பட்டுள்ளது. அதாவது “நானே நினைத்தாலும் கூட மாற்ற முடியாது” என்று மனித மூளையில் ஆணி அடித்ததைப்போல் எழுதி வைத்திருக்கிறார்கள். இது எந்த அளவிற்கு உண்மை. இப்படி ஒரு கடவுள் சொல்லி இருப்பாரா? அப்படி பிறப்பின் அடிப்படையில் பேதத்தை சொல்லிக் கொடுக்கும் கடவுள் மனிதத் தன்மைக்கு ஏற்றவராக இருக்க முடியுமா என்று ஆராய்ந்து மானுட நலனுக்காகவே கடவுளை எதிர்க்க ஆரம்பித்தார்.

கடவுள் பற்றிய புராணக் கதைகளை கோயிலை மையமாக வைத்து பரப்பப்படுகிறது. அதனால் கோயிலையும் எதிர்த்தார். இப்படி எது எது பிறவி பேதத்தை போற்றி பாதுகாக்கிறதோ, எது எது உயர்ந்த சாதிக்காரன் – தாழ்ந்த சாதிக்காரன், இவனை தொடக்கூடாது – அவனை தொடலாம், ஆண் உயர்ந்தவன், எஜமானன், பெண் தாழ்ந்தவள் என்று பிறவி பேதத்தை கற்பிக்கறதோ அதை எதிர்த்தார். அதை ஒழிக்க தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தார், போராடினார். இதற்கு காரணம் அவரிடம் இருந்த மனிதாபிமானம். வேறு எவரிடமும் இல்லாத மானுடத்தின் மீது அவருக்கு இருந்த அக்கறை தான் காரணம். அதனால் தான் அவர் தொடங்கிய இயக்கத்திற்கு சுயமரியாதை இயக்கம் என்று பெயரிட்டார். மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்று ஒரு வரியில் கொள்கையை சொல்லி, சிந்திக்க தூண்டினார்.
சீமான் யார்?
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆரம்பக் காலத்தில் பெரியாரின் கொள்கைகளை பேசினார், பெரியாரிய சிந்தனையாளர்களுடன் பயணம் செய்தார். நாம் தமிழர் கட்சி 2010 மே மாதம் 18 ம் தேதி தொடங்கியபோதும் பெரியாரின் கொள்கைகளை பேசினார். அதன் பின்னர் படிப்படியாக அவருடைய கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. முப்பாட்டன் முருகனை வழிப்பட தொடங்கினார். தொடர்ந்து மாயோன் கிருஷ்ணரை வழிப்பட்டு, சாதிப் பெருமையை ஏற்றுக்கொண்டு ஒரு சனாதனவாதியாக மாறிப் போனார். அவருக்கென்று நிலையான கொள்கை கிடையாது. ஆர்எஸ்எஸ், பாஜக வரிசையில் நாம் தமிழர் கட்சியினரும் சேர்ந்து திராவிட அரசியலையும், பெரியாரையும் எதிர்த்து வருகின்றனர்.
ஆனால் சீமான் மட்டும் அவர்களை விட தந்தை பெரியாரை அவதூறாக பேசி வருகிறார். பெரியார் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை. கொள்கை அளவில் விமர்சனம் செய்வதை எவரும் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் வெறுப்போடு, வன்மத்துடன், ஆபாசமாக பேசுவதை தான் எதிர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

பகவத்கீதையில் “சதூர்வர்ண மயாசிஷ்டம்” த்தில் நான்கு சாதிகளை நானே உருவாக்கினேன். அதை “நானே நினைத்தாலும் கூட மாற்றமுடியாது” என்று கிருஷ்ணர் சொல்வதுதான் “சனாதனம்”. அது மாறாதது. நிலையானது என்கிறார். அதைதான் தந்தை பெரியார் எதிர்த்தார். அறிவியல் விதிப்படி அது தவறு, மாறாதது உலகில் எதுவுமே இல்லை. மாறவேண்டும், அதை மாற்றிக் காட்டுவேன் என்று களத்தில் இறங்கி போராடியவர் தந்தை பெரியார். அதில் அவர் வாழ்ந்த காலத்திலேயே ஓரளவிற்கு சாதித்தும் காட்டிவிட்டார்.
எதற்கு எடுத்தாலும் பெரியார்தான் போராடினாரா? எங்கள் பாட்டன்கள் எல்லோரும் பல்லாங்குழி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார்களா? என்று சீமான் கேட்கிறார். அவர் சொல்லும் பாட்டன்களில் ராஜராஜ சோழன் தொடங்கி, மா.பொ.சி. மணியரசன் வரை ஒருவர் கூட சாதி ஆதிக்கத்திற்கு எதிராக, தீண்டாமை கொடுமைக்கு எதிராக, பெண் அடிமை தனத்திற்கு எதிராக ஒருவரும் இயக்கம் தொடங்கவில்லை! போராடவில்லை!. எல்லோரும் தமிழ் தேசியம் என்றார்கள், தமிழர்கள் என்றார்கள். ஆனால் ஊருக்கு அருகில் இருந்த சேரிக்கு தீ வைப்பதை வேடிக்கை பார்த்தார்கள். தமிழ் தேசியம் பெயரில் ஆணாதிக்க மனப்பான்மையுடன்பெண்களை அடிமையாகவே நடத்தி வந்தார்கள். பெரியார் மட்டுமே அத்தனை வேறுபாடுகளுக்கு எதிராகவும், ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் இயக்கத்தை தொடங்கினார், அதற்காக போராடினார். அவரால் சமூகத்தில் சில மாற்றங்களை கொண்டுவர முடிந்தது.
தமிழனின் மூளையிலும், தமிழ் மொழியிலும் ஆன்மீக புராண கதைகளை தவிர வேறு எதுவும் இல்லை என்று வருத்தப்பட்டார். மேலும் ஒருவர் மீது கோபப்பட்டால் பெண்களை உச்சரிக்காமல் வசைப்பாட (திட்டுவதற்கு) தமிழில் இடமில்லை. அதனால் தமிழ் மொழியை இகழ்ந்தார். காட்டுமிராண்டி மொழி என்றார். ஆனால் அவர் தான் தமிழ் மொழியில் இருந்த குறைபாடுகளை சீர்திருத்தம் செய்தார். அதனால் இன்று ஆங்கில மொழிக்கு இணையாக தமிழும் கணிணியில் இடம்பெறுகிறது என்றால் அதற்கு பெரியார் தான் காரணம்.
பெரியாரின் கைத்தடி வளைந்து, பழையதாகிவிட்டது. அதைவைத்து என்ன செய்யமுடியும் என்கிறார் சீமான். ஆம், பெரியாரின் கைத்தடியும், கண்ணாடியும் பழையது தான், ஆனால் அது அனைத்து காலத்திற்கும் பொருந்தக் கூடிய பகுத்தறிவு சிந்தனை கொண்டது. விஞ்ஞான பூர்வமான கருத்தியலை கொண்டது. அது சீமான் போன்ற சனாதன குப்பைகளை கண்டிப்பாக விரட்டி அடிக்கும்.