spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைசெந்தில்பாலாஜி, பொன்முடியை உடனே தூக்குங்க!  10 மாதம் ஸ்டாலினுக்கு சவால்! நிலவரத்தை சொல்லும் ப்ரியன்! 

செந்தில்பாலாஜி, பொன்முடியை உடனே தூக்குங்க!  10 மாதம் ஸ்டாலினுக்கு சவால்! நிலவரத்தை சொல்லும் ப்ரியன்! 

-

- Advertisement -

எதிர்வரும் 10 மாத காலம் திமுக அதிகமான சங்கடங்களை சந்திக்கும் என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வெற்றிபெற விடாமல் தடுக்க அனைத்து முயற்சிகளையும் பாஜக செய்யும் என்றும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்  தெரிவித்துள்ளார்.

priyan
priyan

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை மற்றும் அமைச்சரவை மாற்றம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- செந்தில்பாலாஜி பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த விவகாரத்தில் முதல்வருக்கு தர்மசங்கடமான நிலைதான் உள்ளது. ஏனென்றால் ஜாமின் கொடுத்து 2 நாட்களில் அமைச்சர் பொறுப்பு வழங்கினார். அவருடைய சேவை தேவை என்று நினைத்து முதல்வர் இதனை செய்தார். இந்த மொத்த பிரச்சினையில் பார்த்தோம் என்றால் அவர் ஆயிரக்கணக்கானோரிடம் பணம் வாங்கியுள்ளார் என்று அமலாக்கத்துறை சட்டவிரோத பண பறிமாற்ற வழக்கில் வழக்குப்பதிவு செய்தது. அவர் 12 மாதங்கள் வரை சிறையில் இருந்தார். அவருக்கு ஜாமின் வழங்கியபோது தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் கூறியது. தற்போது நீங்கள் ஜாமினில் செல்வதற்கு தகுதியானவர் என்ற அடிப்படையில் விடவில்லை. உங்களது அடிப்படை சுதந்திரம் பாதிக்கப்படுவதாக கூறி ஜாமின் வழங்கியதாக கூறுகிறார்கள். ஆனால் நிறைய பேருக்கு ஜாமின் கொடுத்திருக்கிறார்கள். அப்படி ஜாமினில் வந்து முதலமைச்சராகவும், அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் செந்தில்பாலாஜிக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்கிற கேள்வி எழுகிறது.

we-r-hiring
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Photo: Minister Senthil Balaji

நேற்று முன்தினம் விசாரணையின்போது செந்தில்பாலாஜி அமைச்சராக தொடரும்பட்சத்தில் அவர் சாட்சிகளை கலைக்க முற்படுவார். விசாரணையை தடம்புரள செய்வார் என்று எதிர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது நீதிபதி ஓகா,  கடந்த முறை அமைச்சராக இருந்தபோது செந்தில்பாலாஜி சாட்சிகளை கலைக்க முற்பட்டார் என்று சொல்கிறார். மேலும் நீதிபதி முடிவுக்கு வந்துவிட்டார் பிணை வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா? என்று. இந்த சூழலில் பதவிதான் முக்கியம் என்று கூறினால், அவரது ஜாமினை ரத்து செய்ய அனைத்து வேலைகளும் நடைபெறும். அது திமுக அரசுக்கு அவமரியாதை ஆகி விடும். இந்த விவகாரத்தில் ஸ்டாலின் யோசிக்க வேண்டும். செந்தில் பாலாஜி, முதலமைச்சருக்கு முக்கியமானவராக இருக்கலாம், நல்ல விசுவாசியாகக்கூட இருக்கலாம். ஆனால், திமுக அரசின் பெயர் போகிற போது, செந்தில் பாலாஜியை பலி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். நீங்கள் அவரை அமைச்சரவையில் சேர்க்கும்போதே யோசித்திருக்க வேண்டும். நாளை வரை செந்தில்பாலாஜிக்கு அவகாசம் கொடுத்திருக்கிறார்கள். அதற்குள்ளாக அவர் ராஜினாமா செய்யாவிட்டால், முதலமைச்சருக்கு கெட்டப் பெயர் ஆகும்.

ponmudi mk stalin

பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்க பலரும் வலியுறுத்துகிறார்கள். பொன்முடி மீதான வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றத்தில் தண்டனையையும்,  தீர்ப்பையும் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அதனால் தான் அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. தற்போதைய சர்ச்சை என்பது அவர் அசிங்கமாக, ஆபாசமாக பேசியதுதான். மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் பேசினார். பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும் அவர் பேசினார். குறிப்பாக மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியதற்கு நீதிபதி, அவர் மீது சூமோட்டோவாக வழக்குப்பதிவு செய்ய பதிவாளரிடம் கூறிவிட்டார். பொன்முடி வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டார்கள். இந்நிலையில், பொன்முடி அமைச்சராகவே இருக்கக்கூடாது என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதது.

இன்றைக்கு நிலைமை சரியில்லை. திமுக அரசை எதிர்த்து என்ன விஷயம் கிடைக்கும்? என்று எதிர்க்கட்சிகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அதுவும் மதஉணர்வுகளை புண்படுத்தும் விவகாரம் என்றால் அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போன்றதாகும். அப்போது திமுகவினர் எவ்வளவு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இன்றைக்கு மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளது. மாநிலத்திலும ஊடகங்களை எல்லாம் தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு  வேலைசெய்கிறார்கள். அப்போது நீங்கள் எது பேசினாலுமே அதை சமூக வலைதளங்களில திரித்து விடுகிறார்கள். மோசமாக பேசினால் இன்னும் மோசமாக திரித்துவிடுவார்கள். அப்படி உள்ளபோது திராவிடர் கழக கூட்டத்தில் பேசுகிறபோது எதை வேண்டுமானாலும் பேசலாமா? நீங்கள் ஒரு அமைச்சர். தனிப்பட்ட நபராக இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாம். ஸ்டாலின் கவலையே பட மாட்டார். நீங்கள் எல்லோருக்குமான அமைச்சராக இருக்கிறபோது ஒரு குறிப்பிட்ட பிரிவினரை தாக்கி பேசிவிட முடியாது. அதனால் ஸ்டாலினுக்கு வேறு வழி கிடையாது. அமைச்சர் பொறுப்பில் இருந்து பொன்முடி ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது முதல்வர் அவரை நீக்க வேண்டும்.

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

முதலமைச்சர், பொன்முடியின் கட்சிப்பதவியை பறித்ததுடன் விட்டுவிட்டார். இந்த விஷயத்தை மக்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைக்கிறார்.  ஆனால் பொன்முடி செய்த விஷயம் நீருபூத்த நெருப்பாக இருந்துகொண்டே இருக்கும். ஏனென்றால் இது வாக்கு வங்கி விஷயம். முதலமைச்சர் அப்போதே பொன்முடியை தூக்கி இருக்க வேண்டும். சீனியர் என்ற ஒரே காரணத்திற்காக இவ்வளவு நாளாக தப்பியுள்ளார்.  எனவே செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகியோர் கண்டிப்பாக பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும். அப்படி இல்லாவிட்டால் முதல்வருக்குதான் கெட்டப்பெயர். அதேபோல் அடுத்த 9 மாதங்களுக்கு கூடுதலாக மந்திரிகள் போட வேண்டாம் என்றால் இருக்கிற துறைகளை தங்கம் தென்னரசுவுக்கும், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் பிரித்து வழங்குவது தான் ஸ்டாலினுக்கு இருக்கும் ஒரே வழியாகும்.

அடுத்த 10 மாத காலத்தில் திமுக பலவித சங்கடங்களை சந்திக்கும்.  பல பேர் பல வழக்குகளில் சிக்கியுள்ளார்கள். முடிந்துபோன வழக்குகளை மீண்டும் எடுக்கிறார்கள். எம்.ஆர்.கே.பன்னிர்செல்வம், துரைமுருகன் வழக்குகளை எடுத்துள்ளார்கள். வேலு, அனிதா ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார்கள். இதுபோன்ற பல விஷயங்கள் போய்க்கொண்டு இருக்கின்றன. திமுக ஏன் சங்கடங்களை சந்திக்கிறது என்றால்? பாஜகவுக்கு தேசிய அளவில் திமுக போன்ற ஒரு எதிரி கிடையாது. திமுக சித்தாந்த ரீதியாக எதிரியாக இருக்கிறது. மற்ற அரசுகளை பாஜக எதிர் கொள்வதற்கும், திமுக அரசை எதிர்கொள்வதற்கும் வித்தியாசம் உள்ளது. இங்கே திராவிட அரசியல் Vs  இந்துத்துவா அரசியலாக உள்ளது. ஸ்டாலின் மாநில உரிமைகளுக்காக போராடுகிறார். உச்சநீதிமன்றம் வரை சண்டைபோடுகிறார். குடியரசுத் தலைவருக்கே காலக்கெடு நிர்ணயிக்கிறார்கள். மற்ற மாநிலங்களோடு இணைந்து போராடுகிறார்கள். இவை எல்லாம் அவர்களுக்கு இடைஞ்சலாக உள்ளது.  அதனால் எதோ ஒரு வகையில் தொல்லை கொடுத்து வரப்போகிற தேர்தலில் திமுக வெற்றிபெறக் கூடாது என்பதில் பாஜக தெளிவாக உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ