எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு, ஆளுமை மிக்க தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என்பது உண்மையே என்றும், எடப்பாடி பழனிசாமி ஒரு ஆளுமை மிக்க தலைவர் கிடையாது என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ திமுகவில் இணைந்ததன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- ஆலங்குளம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், அக்கட்சியில் இருந்து விலகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். ஓபிஎஸ் அணியை சேர்ந்த மனோஜ் பாண்டியன்,ஜே.சி.டி.பிரபாகர், வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவுக்கு செல்வார்கள் அல்லது அதிமுகவுக்கு திரும்புவார்கள் என்று கடந்த 2 மாதங்களாக பேச்சுக்கள் அடிபட்டு வந்தது.

மனோஜ் பாண்டியனின் தந்தை பி.ஹெச்.பாண்டியன் சபாநாயகராக இருந்தவர். அதிமுக பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர் மனோஜ் பாண்டியன் என்பதால், அவர் திமுகவுக்கு சென்றதற்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது. அவர், திமுகவில் சேர்ந்துள்ளதன் மூலம் தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்பு வலுவாக இருக்கிறது என்பது தான் தெரிகிறது. மனோஜ்பாண்டியனின் பேச்சிலும் அது வெளிப்பட்டது. தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு வாக்குகள் அதிகமாகும். அந்த வாக்குகளை முழுமையாக வாங்க வேண்டும் என்று திமுக நினைக்கிறது. எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை மூலம் பாஜக முறைகேட்டில் ஈடுபடும் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்கு காரணம் பாஜக எதிர்ப்பு வாக்கு வங்கியாகும்.

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி மிகப்பெரிய தொகுதியாகும். கிறிஸ்தவ சமுதாய மக்கள் நிறைந்த தொகுதி அது. அங்கே பாஜக எதிர்ப்பு பெரிய அளவில் இருக்க வாய்ப்பு உள்ளது. அப்போது அதிமுக வாக்காளர்களாக இருந்தாலும் அவர்கள் திமுகவுக்கு தான் வாக்களிப்பார்கள். காரணம் பாஜக எதிர்ப்பு வாக்குகள் முழுமையாக தங்களிடம் வர வேண்டும் என்று திமுக நினைக்கிறது. விஜய் வருகிறபோது கிறிஸ்தவ அமைப்புகள் அவருக்கு ஆதரவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் தேர்தல் நேரத்தில் பாஜக எதிர்ப்பு பெரிதாக இருக்குமா? அல்லது கிறிஸ்தவ ஆதரவு நிலைப்பாடு இருக்குமா? என்கிற கேள்வி எழும். ஆனால் தேர்தல் நேரத்தில் பாஜக எதிர்ப்பு மனநிலை தான் முன்னிலையில் இருக்கும். அப்போது மனோஜ் பாண்டியனுக்கு திமுக தான் சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
தமிழகத்தில் அரசுக்கு எதிரான மனநிலை உள்ளது. கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, காவல்துறைக்கு பொறுப்பான முதலமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும். பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது உண்மை. அதை சுட்டிக்காட்ட வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமையாகும். ஆனால் தேர்தலின்போது தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனென்றால் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு பிறகு நடந்த தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெற்றது.

ஓபிஎஸ் உடன் வந்த ஜே.சி.டி.பிரபாகர், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய மூன்று பேருக்கும் இருந்த வாய்ப்பு என்பது எடப்பாடியிடம் திரும்ப வேண்டும் என்பதுதான். காரணம் 3 பேரும் எம்.ஜி.ஆரின் ஆதரவாளர்கள். ஆனால் அவர்களுக்கு அதிமுகவில் வாய்ப்பு இல்லை என்றாகி விட்டது. அப்போது மனோஜ் பாண்டியன் இயல்பாகவே திமுகவுக்கு சென்றுவிட்டார். மருது அழகுராஜ், ஜெயலலிதாவுக்கு உரைகள் தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். நமது எம்ஜிஆர் நாளிதழின் ஆசிரியராக இருந்த அவருக்கு, அதன் பிறகு வாய்ப்பு ஏற்படவில்லை. அதனால் திமுகவுக்கு சென்றார். மைத்ரேயன் இருக்கும் மயிலாப்பூர் தொகுதி பாஜக தொகுதி என்கிற சித்திரம் உள்ளது. அப்படி அந்த தொகுதி இருந்திருந்தால் மைத்ரேயன் திமுகவுக்கு சென்றிருக்க மாட்டார். இவற்றுக்கு எல்லாம் பிரதான காரணம் அதிமுக பலவீனமாக இருப்பது தான். அதை எடப்பாடி பழனிசாமி இன்னும் புரிந்துகொள்ள வில்லை.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆளுமை இருப்பதாக சொல்கிறார்கள். அது உண்மை தான். எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் இருந்த பொதுவான பண்பு என்பது மாநில நலனை விட்டுக் கொடுக்காதது. சமூகநீதி போன்றவையாகும். எம்ஜிஆர், அண்ணா, கலைஞர் போன்ற திராவிட இயக்க தலைவர்களிடம் பொதுவான பண்பை பார்க்கலாம். ஜெயலலிதா தன் மீதான பிராமணர் என்கிற பார்வையை போக்க 69 சதவீதம் இடஒதுக்கீட்டை உறுதி செய்து, திராவிட இயக்கத்தின் புதிய பரிணாம வளர்ச்சி நான் என்று சொன்னார். அதற்கு பிறகு பாஜக உடன் கூட்டணி வைத்த ஜெயலலிதா, கடைசியில் தவறுகளை உணர்ந்து பாஜக உடன் கூட்டணியே கிடையாது என்று அறிவித்தார். இதன் மூலம் திராவிட இயக்கத்தின் அடுத்தக்கட்ட தலைவர் என்பதை ஜெயலலிதா நிரூபித்தார். அ
திமுகவில் இருந்து விலகியவர்களுக்கு செல்வதற்கு திமுக தான் சரியான வாய்ப்பு ஆகும். காரணம் திமுக ஒரு திராவிட கட்சியாகும். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தன்னிகரற்ற தலைவர் கிடையாது. தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக உள்ளார். செங்கோட்டையன் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் பின்னால் பாஜக இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இதை பயன்படுத்தி பாஜக அதிமுக கூட்டணியில் அதிகமான இடங்களை கேட்கும். அப்படி தராவிட்டால் இரட்டை இலை சின்னத்தில் கை வைப்பார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


