சுதந்திர இந்தியாவில் அரசியல் காரணங்களுக்காக அதிக ஆண்டுகள் சிறையில் இருந்த ஒரே அரசியல் தலைவர் வைகோ என்று வரலாற்று ஆய்வாளரும், ஓய்வுபெற்ற ஐ.நா. அதிகாரியுமான கண்ணன் தெரிவித்துள்ளார்.

மதிமுகவில் வாரிசு அரசியல் காரணமாக பூகம்பம் வெடித்திருக்கும் சூழலில், வாரிசு அரசியலை எதிர்த்து திமுகவில் இருந்து வைகோ வெளியேறியது முதல் தற்போது மகனுக்காக கட்சியினர் மீது துரோக குற்றச்சாட்டுகளை சுமத்துவது வரையிலான வரலாற்றை விளக்கி ஐ.நா. முன்னாள் அதிகாரி கண்ணன் பிரபல யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:- கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பாக என்னைப் போன்ற இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்த தலைவர்கள் என்றால் அது வைகோ, ப.சிதம்பரம் ஆகியோர்தான். திமுக தொண்டர்கள், இளைஞர்கள் மத்தியில் கலைஞருக்கு பிறகு அவர்தான் என்கிற நிலை இருந்தது. மாநாடுகளுக்கும், கூட்டங்களுக்கும் வைகோ வருகிறார் என்றால் கூட்டம் ஆர்ப்பரிக்கும். வைகோவை கண்டு பொங்குவதும், அவர் பேச்சுக்காக காத்திருப்பதும், அவர் பேசிய பிறகு எழும் கரவொலி மண்டபத்தை பிளப்பது போன்று கேட்பது சாதாரணமானது.
வைகோ மிகப்பெரிய ஆளுமை என்பதற்கு உதாரணம் கலைஞர் அவரை தொடர்ந்து 18 ஆண்டுகள் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தார். இதன் மூலம் எந்த அளவுக்கு நம்பிக்கையையும், பெரிய எதிர்பார்ப்பையும் வைகோ வைத்திருந்தார் என்பது தெரியும். கலிங்கப்பட்டி என்கிற சின்ன கிராமத்தில் பிறந்து, பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி, பிரசிடென்சி கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு பிடித்தார். பின்னர் சட்டப்படிப்பு முடித்து, உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த ரத்தினவேல் பாண்டியன் என்பவரிடம் ஜுனியராக சேர்ந்து பணியாற்றினார்.
ரத்தினவேல் பாண்டியன், நெல்லை மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். பின்னர் அவர் வேறு பாதையை தேர்வு செய்தார். அதனால் அவர் உச்சநீதிமன்றம் வரை உயர்ந்தார். சென்றார். வென்றார். அவரது அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட வைகோ என்கிற புரட்சி புயல், ஒரு உணர்ச்சி பிழம்பாக இருப்பதைதான் நாம் அன்றும் பார்த்திருக்கிறோம். இன்றும் பார்க்கிறோம். இப்படி இருப்பது தான் அவரது வெற்றி, பிளஸ் பாய்ன்ட் என்று நாம் நினைத்தோம் என்றால், அதுதான் அவருக்கு பெரிய பின்னடைவாகவும் இருந்துள்ளது. என்னை பொருத்தவரை வைகோ, கிரேக்க துன்பவியல் நாடகத்தின் தலைவராக தான் தோன்றுகிறார். ஒரு அபிமன்யுவாக அவர் விலகி இருந்த காலம் உண்டு. இன்று அவர் திருதிராஷ்டிரனாக மாறி இருக்கிறார் என்பதையும் நாம் பார்க்கிறோம்.
வாரிசு அரசியலை எதிர்த்து இயற்கையாக ஒரு தலைமை வர வேண்டும் என்பதற்காக போர்க்கொடி உயர்த்தி வெளியே வந்தவர் வைகோ. அதனால் தான் அவர் மீது இவ்வளவு விமர்சனங்கள் வருகின்றன. வைகோ திமுகவில் இருந்து வெளியேற்றியபோது எம்.ஜி.ஆருக்கு நடக்காதவை எல்லாம் நடந்தன. வைகோ என்கிற தலைவனுக்காக 5 பேர் தீக்குளித்து இறந்தனர். முதல் மரணத்தின்போது இடுகாட்டில் வைகோ பேசிய பேச்சு, நெஞ்சை உருக்கக்கூடிய பேச்சாக இருந்தது. அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், மார்க் ஆண்டனி சீசரின் உடலை வைத்துக்கொண்டு பேசியது போன்று இருந்ததாக சொன்னது.

வைகோவின் வளர்ச்சி என்பது இயல்பாக அமைந்தது. மிகவும் புத்துணர்ச்சி மிக்கவர். தன்னை சுற்றியிருப்பவர்களின் தேவைகளை அறிந்து உதவக்கூடியவர். நிறைய நல்லியல்புகளை கொண்ட தலைவர். மத்திய அமைச்சரவையில் சேர்க்க பலமுறை அழைப்பு வந்தபோதும் அதனை வேண்டாம் என்று தட்டிக்கழித்துவிட்டார். அவற்றை எல்லாம் மக்கள் நினைவில் வைத்துக்கொள்ள மாட்டார்கள். சரியான தருணங்களில் மிகத் தவறான முடிவுகளை எடுப்பதில் மிக தலையாய ஒரு இடத்தில் இருந்தவர், இருப்பவர், இனியும் இருப்பார் என்று நினைக்கும் அளவுக்கு நடந்துகொள்பவர் வைகோ. வைகோ, கலைஞரிடம் மிகவும் அணுக்கமாக இருந்தார். மக்களை தட்டி எழுப்புகிறது போன்ற பேச்சாற்றல் கலைஞரிடம் இருந்தது. அதற்கு பிறகு வைகோவுக்கு தான் அந்த பேச்சாற்றல் இருந்தது.
1970-களில் இருந்து வைகோ திமுக அரசியலில் இருந்தார். திமுகவில் தொண்டர் அணி என்பதை உருவாக்கி, அதன் தலைவராக இருந்தார். எம்ஜிஆர் என்னுடைய அரசை எதிர்த்து ராணுவத்தை உருவாக்குகிறார்கள் என்று அவரை சிறையில் அடைத்தார். எமெர்ஜென்சி காலத்தில் திமுகவினர் கைதுசெய்யப்பட்டபோது முதல் நபராக கைதானவர் வைகோ. சுதந்திர இந்தியாவில் அரசியல் காரணங்களுக்காக அத்தனை முறை சிறைக்கு சென்றவர் வைகோவை தவிர வேறு யாரும் கிடையாது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் வைகோ சிறையில் இருந்தார். பொடாவில் மட்டும் 19 மாதங்கள் சிறையில் இருந்தார்.
வைகோ மாவட்டந்தோறும் செல்கிறபோது மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது. தொண்டர்களை அரவணைப்பதும், அவர்களுடன் இன்முகத்துடன் பேசுவதும் அவருக்கு ஆதரவாளர்களை அதிகரித்தது. திமுகவில் கலைஞருக்கு பிறகு தெரிந்த முகம் வைகோதான். அப்படி இருக்கும் நிலையில், ஈழப்பிரச்சினை வைகோவை மிகவும் அலைக்கழிக்கிறது. அதில் போய் வைகோ முழுமையாக விழுகிறார். அப்போது யாருக்கும் தெரியாமல் 22 நாட்கள் இலங்கை வவுனியா காடுகளுக்கு சென்றுவிட்டார். அப்போது அவர் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர். இது குறித்து அவர் எழுதிய கடிதம் நண்பர் ஒருவர் வாயிலாக மறுநாள் கலைஞரிடம் கொடுக்கப்படுகிறது. அவர் சென்றபோது விடுதலைப்புலிகளுக்கும், இந்திய அமைதிப்படைக்கும் போர் தொடங்கிவிட்டது.
வைகோ வன்னிகாடுகளுக்கு சென்றிருக்கும் செய்தியை ஜுனியர் விகடன் வெளியிட்டது. 1989ஆம் ஆண்டு கலைஞர், ராஜிவ்காந்தியை சந்தித்தார். சந்திப்புக்கு முன்னதாக இந்த செய்தி வெளியானது. பின்னாளில் கலைஞர் அந்த செய்தியை வெளியிட்டது வைகோ தான் என்று சொன்னார். இந்த விவகாரத்தால் கலைஞர் தர்மசங்கடத்திற்கு உள்ளாகினர். எனினும் ராஜிவ்காந்தி பெருந்தன்மையுடன் அதை பொருட்படுத்தவில்லை.
புலிகள், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டது, மிக மிக தவறான அரசியல் கணப்பு ஆகும். கலைஞருக்கு அடுத்து தான் திமுகவின் தலைவராக வர வேண்டும் என்கிற வைகோவின் பேராவலை இந்நிகழ்வு மூலம் வெளிப்படுத்தி விட்டார். இலங்கையில் இருந்து திரும்பிய பின்னர் அவருக்கு இப்படி ஒரு ஆசை இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. 1993-ல் கோவையில் நடைபெற்ற 9வது மாநில மாநாட்டில் கலைஞருக்கு பிறகு வைகோவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது. அந்த மாநாட்டில் பேசிய வைகோ, நான் துரோகியாக மாற மாட்டேன் என்று தன்னிலை விளக்கம் அளித்தார். காரணம் வைகோவை பேச தலைமை தடை விதித்திருந்ததாக சொல்லப்பட்டது.
இரு தரப்பிலும் நம்பிக்கை போய்விட்டது. பின்னாளில் வைகோ திமுகவில் இருந்து வெளியே வருகிறபோது சொல்லிவிட்டு வந்த எல்லாவற்றுக்கும் மாறாக, அதே காரணங்களை இன்று அவரிடம் இருந்து வெளியே வந்த அத்தனை பேரும் சொல்கிற அளவுக்கு நடந்துகொண்டார். எங்கே தொடங்கினாரோ அங்கேயே வந்துவிட்டார்.
திமுகவில் பிளவை ஏற்படுத்திய சம்பத், எம்.ஜி.ஆர், நாவலர் நெடுஞ்செழியன் போன்றவர்களுக்கும், வைகோவுக்கும் என்ன வித்தியாசம் என்றால்? அவர்கள் யாரும் திமுகவுக்கு சொந்தம் கொண்டாடவில்லை. ஆனால் வைகோ சொந்தம் கொண்டாடினார். திமுகவின் கொடியும், சின்னமும் பறிபோய் விடுமோ என்று அஞ்சக்கூடிய அளவுக்கு வழக்குகளை நடத்தியவர் வைகோ. அவற்றில் எல்லாம் தோல்வியுற்ற பிறகுதான் 1994ல் மறுமலர்ச்சி திமுக என்று கட்சியை தொடங்கினார். போட்டி பொதுக்குழுவை கூட்டினார். எம்ஜிஆர் பிரிந்தபோது அவருடன் யாரும் போகவில்லை. அதற்கு காரணம் கலைஞர் உயர்ந்த இடத்தில் இருந்தார். மேலும் எம்ஜிஆர் மீது கட்சியினருக்கு பெரிய அளவில் நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால் வைகோ பிரிந்தபோது கலைஞர் நல்ல நிலையில் இல்லை. அவர் பதவியில் இல்லை.
வைகோ முழு நேர அரசியல்வாதி. ஆனால் எம்ஜிஆர் அப்படி இல்லை. வைகோ வெளியே வந்தபோது, கட்சி தனக்கு உரிமையானது என சொந்தம் கொண்டாடினார். ஆனால் எம்ஜிஆர் அப்படி உரிமை கொண்டாடவில்லை. வைகோ பேராவல் கொண்டவர். கலைஞரின் இடத்திற்கு வரத் துடிக்கிறார் என்கிற எண்ணம் கட்சியினரிடம் வந்துவிட்டது. தான் தானகவே மேலே வருதை கட்சி தலைமை எப்படியாவது தடுத்துவிடும் எண்ணம் வைகோ மனிதல் வந்துவிட்டது. அதனால் அவர்கள் ஒட்டுவதற்கோ, மீண்டும் இணைந்து பயணம் செய்வதற்கோ வழியில்லாமல் போய்விட்டது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.