விஜய் படங்களின் அரசியல் சிறப்பு என்று நான் கருதுவது, சாதி ஆதிக்கத்தை, சாதி பெருமிதத்தை நியாயப்படுத்தும் ஒரு திரைப்படத்தில்கூட விஜய் நடித்ததில்லை என்பதுதான்.
கிராமப்படங்கள் என்ற பெயரில் நிலப்பிரபுத்துவத்தையும் சாதியத்தையும் நியாயப்படுத்தும் படங்கள் 80களில் தொடங்கி 90களின் தொடக்கத்தில் உச்சத்தை எட்டின. ரஜினி (எஜமான்). கமல் (தேவர்மகன்), விஜயகாந்த் (சின்னக்கவுண்டர்), சரத்குமார் (நாட்டாமை) என்று முன்னணி நடிகர்கள் இத்தகைய படங்களில் நடித்தனர்.

இன்னொருபுறம் 1992ல் பாபர் மசூதி இடிப்பு, இந்துத்துவ அரசியல் எழுச்சி, குண்டுவெடிப்புகளையொட்டி முஸ்லீம்களைத் தீவிரவாதிகளாக, தேசவிரோதிகளாக சித்திரிக்கும் திரைப்படங்கள் வெளிவந்தன. விஜயகாந்த், அர்ஜூன் இத்தகைய திரைப்படங்களின் நாயகர்களாக இருந்தனர்.
சாதியப்படங்கள் தேய்ந்து, இந்துத்துவப்படங்களின் அலை தொடங்கிய காலத்தில் விஜய், அஜித், சூர்யா ஆகியோரின் வருகையும் விக்ரமின் மீள்வருகையும் நிகழ்ந்தன. புதிய இயக்குநர்கள், புதிய நாயகர்கள் கொண்ட புதிய குழு தமிழ் சினிமாவில் உருவானது.
கவனிக்கத்தக்க நடிகராக உருவான விஜய் காதல் குறித்த புனித வரையறைகளைத் தன் படங்களில் தொடர்ந்து முன்வைக்கத்தொடங்கினார். அஜித்தின் ‘காதல் கோட்டை’யும் புனிதக்காதல் குறித்த கதையாடலைத் தொடங்கிவைத்தது.
எம்.ஜி,ஆர் – சிவாஜி, ரஜினி – கமல் இணையருக்கு அடுத்தபடியாக உருவான விஜய் – அஜித் இணை குறிப்பிட்ட காலம் வரை காதல் படங்களிலேயே நடித்தனர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தீனா’ திரைப்படம் மூலம் அஜித்தும் ‘திருமலை’ மூலம் விஜய்யும் ஆக்ஷன் ஹீரோக்கள் ஆகினர். இருவரும் உச்சத்தைத் தொட்ட காலகட்டத்தில் சாதியப்படங்கள் மற்றும் முஸ்லீம் விரோதப் படங்களின் இரண்டாம் அலை தொடங்கியது.
முஸ்லீம் விரோதப்படங்கள் முன்பைவிட கூடுதல் அழகியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் ‘விஸ்வரூபம்’ மூலம் தொடங்கியபோது விஜய் ‘துப்பாக்கி’, ‘பீஸ்ட்’ படங்களில் நடித்தார். இரண்டு அலைகளுக்கும் இடையிலான வித்தியாசம் – முதல் அலை முஸ்லீம் விரோதப்படங்கள் உருவானபோது அவை விமர்சனமின்றி ஏற்கப்பட்டன. ஆனால் அடையாள அரசியல் வலிமையான காலத்தில் முஸ்லீம்கள், தலித்துகள், திருநங்கைகள் உள்ளிட்டவர்கள் குறித்த எதிர்மறை சித்திரிப்புகளுக்கு எதிர்ப்புகள் எழுந்தன. விஜய்யும் ‘துப்பாக்கி’, ‘பீஸ்ட்’ படங்களில் எதிர்ப்பை சம்பாதித்தார்.
இன்னொருபுறம் முத்தையா, ஹரி, பிரபாகரன் போன்றவர்களின் மூலம் நிலப்பிரபுத்துவத்தையும் கிராம அமைப்பையும் சாதியத்தையும் புனிதப்படுத்தும் இரண்டாம் அலை படங்கள் வெளியாகின. சசிகுமார் முதன்மை நாயகனாக இருந்தார். கார்த்தி, விஷால் போன்றவர்களும் இந்த படங்களில் நடித்தனர். ஆனால் விஜய் முற்றிலும் இந்த படங்களைத் தவிர்த்தார்.
விஜய் பெரும்பாலும் நகரம் சார்ந்த திரைப்படங்களில் நடித்தவர். சாதியப்படங்களோ கிராமங்களை மையமாகக் கொண்டவை. விஜய்யின் ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ ஆகிய திரைப்படங்கள் கிராமம் Vs நகரம் என்னும் இருமை எதிர்வுகளைக் கட்டமைத்தாலும் அவை சாதியத்தின் அடிப்படையிலான இருமை எதிர்வுகளாக இல்லை.
விஜய் சாதியப்படங்களில் நடித்ததில்லை என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை, அவர் சாதிய எதிர்ப்பு படங்களிலும் நடித்ததில்லை என்பது.
2004ல் வெளியான. பாலாஜி சக்திவேலின் ‘காதல்’ திரைப்படம் சாதியம் குறித்த உரையாடலைத் தொடங்கிவைத்தாலும் அது தொடரவில்லை. மாறாக அதற்குப்பிறகுதான் தென்மாவட்டங்களை சாதியப்பெருமிதக் களமாக முன்வைத்த திரைப்படங்கள் அதிகம் வரத்தொடங்கின.
திராவிட சினிமாக்கள் அலைக்குப் பிறகான நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் அரசியல் சினிமாவுக்கான அலையைத் தொடங்கிவைத்தவர் இயக்குநர் ஜனநாதன். மார்க்சிய வெளிச்சத்தில் சாதி எதிர்ப்பு அரசியலை அவரின் ‘பேராண்மை’ முன்வைத்தது. ஆனால் அம்பேத்கரை முன்வைத்து சாதியம் குறித்த உரையாடலை வலிமையாக மையப்படுத்தி தலித்திய சினிமாக்களை உச்சத்துக்கு கொண்டுபோனவர் பா.இரஞ்சித்தான். பிறகு மாரி செல்வராஜ். அதியன் ஆதிரை தொடங்கி கௌதம்ராஜ், தமிழரசன் பச்சமுத்து என்று சாதிய எதிர்ப்பை முன்வைத்த பல திரைப்படங்கள் வரத்தொடங்கின. அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் போன்ற முற்போக்கு அடையாளங்கள் தமிழ் சினிமாவில் இடம்பெறத் தொடங்கின. வெற்றிமாறன், இரஞ்சித் போன்றவர்கள் அரசியல் சினிமாக்களை அழகியலுடன் உருவாக்கி வணிக வெற்றியையும் ஈட்டியதாலேயே இது சாத்தியமானது. எனவே சாதாரண படங்களில்கூட அம்பேத்கரையும் பெரியாரையும் ஒரு புகைப்படமாக காட்டுவது ஃபேஷன் ஆனது.
இப்படி எழுந்த அரசியல் சினிமா அலைக்கு விஜய்யின் பெரும்பாலான சகநடிகர்கள் முகம் கொடுத்தனர். ரஜினி : கபாலி, காலா, விக்ரம் : தங்கலான், சூர்யா : ஜெய்பீம், கார்த்தி : மெட்ராஸ், தனுஷ் : அசுரன், வடசென்னை என்று பட்டியலிடலாம். விஜய்யின் சக போட்டியாளரான அஜித் நேரடியாக சாதி எதிர்ப்பு படத்தில் நடிக்கவில்லை என்றாலும் ஆண்மய்ய மதிப்பீடுகளின்மீது காத்திரமாக கேள்வியெழுப்பிய ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் நடித்தார். ஆனால் இந்த அலைக்கு முகம் கொடுக்காமல், அரசியல் சினிமாக்களையே முற்றிலும் தவிர்த்த முன்னணி நடிகர் விஜய்தான்.
தேர்தல் அரசியலுக்கு வருவதற்குத் தயாரான மனநிலையில் ‘கத்தி’, ‘மெர்சல்’, ‘சர்கார்’ போன்ற பொதுப்புத்தி அரசியல் படங்களில் நடித்தார். இவை எதுவும் ஆழமான அரசியல் உரையாடல்களைக் கொண்டவையல்ல.
எம்.ஜி.ஆர், விஜயகாந்தைப் போல் விஜய் படங்களின் பிம்பங்கள் குறித்து விரிவாக ஆராய முடியாத தடைக்கு காரணம், அப்படியான எந்த பிம்பங்களையும் விஜய் உருவாக்காததுதான். எம்.ஜி,ஆர் திராவிட இயக்க கருத்துகளைத் தன் சினிமாக்கள் மூலம் முன்வைத்தார். விஜயகாந்த் தமிழுணர்வு, ஈழ ஆதரவு ஆகியவற்றை திரைக்கு வெளியிலும் ஊழல் எதிர்ப்பு, நேர்மையான போலீஸ் ஆகியவற்றை திரையிலும் கட்டியெழுப்பினார். ஆனால் தமிழ் சினிமாவில் விஜய்யின் இடம் என்பது மக்களை மகிழ்விக்கும் வணிக கலைஞர் என்பதுதானே தவிர அரசியல்ரீதியான பிம்பங்களை உருவாக்கியவர் அல்ல.
விஜய்யைப் பொறுத்தவரை அவர் திரையுலக வாழ்க்கையின் அடிப்படையே ரிஸ்க் எடுக்க விரும்பாத தன்மைதான்.
விஜய் திரையுலக வாழ்க்கையில் பெரும்பாதி ஒரேமாதிரியான கதைக்களத்தைக் கொண்ட திரைப்படங்கள்தான். அவை முற்றிலும் அரசியல், சமகாலப்பிரச்சினைகளில் இருந்து விலகி காதல் காட்சிகள், வில்லன், சண்டைக்காட்சிகள் என்ற வழக்கமான தமிழ் சினிமா ஃபார்முலாவில் நகைச்சுவை, அபாரமான நடனம் என்ற ஃப்ளேவரை மட்டும் கூடுதலாகச் சேர்த்துக்கொண்டது, அவ்வளவுதான்.
விஜய் சாதியப்படங்களில் நடிக்காததற்கு காரணம், இத்தகைய படங்களில் பெரிய மீசை வைக்க வேண்டியிருக்கும், அது தன் குழந்தைத்தனமான முகத்துக்குப் பொருந்தாது என்பதாகக்கூட இருக்கலாம். ஏனெனில் அவர் ஒருசில படங்களில் செய்த தோற்ற மாற்றம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. மேலும் அவர் எந்த பரிசோதனை சினிமாக்களிலும் நடித்தவருமில்லை. பா.ரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் போன்றவர்களின் படங்களில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் புதிய கதைசொல்லலைத் தொடங்கிவைத்த பாலா, அமீர், பாலாஜி சக்திவேல், செல்வராகவன், வசந்த பாலன், ராம், மிஷ்கின் போன்றவர்களின் படங்களிலும் அவர் நடித்ததில்லை.
அவர் சாதியப்படங்களிலோ சாதி எதிர்ப்பு படங்களிலோ நடிக்காததற்கு காரணம் ‘நமக்கு ஏன் வம்பு, தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிக்கொள்ள வேண்டாம்’ என்ற மனநிலைதான். அவர் நடிகர்சங்கத் தேர்தல், தொழிலாளர் பிரச்சினை போன்ற திரைத்துறை சார்ந்த எந்த பிரச்சினைக்கும் குரல் கொடுத்தவரில்லை.
கமல்ஹாசன் முதல் சூர்யா வரையிலான நடிகர்கள், தான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை மீண்டும் சினிமாவில் முதலீடு செய்து மாறுபட்ட சினிமாக்களை உருவாக்க முயன்றனர். தனுஷ் ‘விசாரணை’ என்ற படத்தை தயாரித்தார். சிவகார்த்திகேயன் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தை தயாரித்தார். ஆனால் விஜய்க்கோ சினிமா என்பது அவர் பணமீட்டுவதற்கான ஒரு தொழிலே தவிர, பரிசோதனை முயற்சிகளுக்கான கலைக்களமல்ல. தன்னை கேரியரின் உச்சத்துக்கு உயர்த்திய சினிமாவுக்கு விஜய் திரும்பச் செய்தது என்ன என்றால் ஒன்றுமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
விஜய் திரைப்படங்கள் அரசியல்நீக்கம் செய்யப்பட்ட திரைப்படங்கள். அவர் ரசிகர்களும் இப்போதைய த.வெ.க தொண்டர்களும் அதையே பிரதிபலிக்கின்றனர். உருவ மாற்றம், பரிசோதனை சினிமாக்கள், அரசியல் சினிமாக்கள், சினிமாவில் முதலீடு என்று எந்த ரிஸ்க்கும் எடுக்காத விஜய்யின் தன்மையே, கரூர் சம்பவம் முதல் ‘ஜனநாயகன்’ நெருக்கடி வரை அவர் அரசியலிலும் பிரதிபலிக்கிறது.
வறுமையையும் சாதிய ஒதுக்குதலையும் சந்தித்து அதன்மூலம் அரசியல் உணர்வு பெற்று இட ஒதுக்கீடும் கல்வியும் பெற்றவர்களின் குழந்தைகள் வறுமையும் வலியும் இல்லாத வாழ்க்கையை நுகர்கிறார்கள். அவர்களுக்கு கடந்தகால வலிமிகுந்த வரலாறு தெரியாது. சமகால அரசியல் குறித்து அவர்கள் அறியத் தேவையில்லாத வாழ்க்கை. லட்சியவாதங்களுக்கும் அவர்களுக்கும் தொலைதூரம். இப்படிப்பட்ட தலைமுறையின் தேர்வாக விஜய் இருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.
‘ஆட்சிமாற்றம் வேண்டும்’ என்கிற அவர்களின் குரல்கள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய செல்போன் வாங்கும் நுகர்வு கலாச்சார மனநிலையின் பிரதிபலிப்பே தவிர வேறில்லை. ‘என்ன மாற்றம் வேண்டும், தமிழ்நாட்டின் பிரச்சினைகள் என்ன, மற்ற மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டுக்குமான வித்தியாசம் என்ன?’ என்ற எந்த கேள்விக்கும் அவர்களுக்குப் பதில் தெரியாது.
இப்படி அரசியல்நீக்கம் செய்யப்பட்ட சினிமாக்களின் மூலம், அரசியல்நீக்கம் செய்யப்பட்ட தலைமுறைக்கான நாயகனாக உருவான விஜய், அரசியலுக்கு வந்தாலும் அவருக்கும் ‘கொள்கைத்தலைவர்கள்’ தேவைப்படுகின்றனர்.

காரணம், அம்பேத்கரையும் பெரியாரையும் உடன்பாடாகவோ எதிர்மறையாகவோ பேசாமல் இன்றைய அரசியல் இல்லை என்ற சூழல்தான்.
33 ஆண்டுகால விஜய் திரைப்படங்களில் ஒரு பாடல்காட்சி, ஒரு வசனத்தில் மட்டும் இடம்பெற்ற பெரியாரும், இடம்பெறவே இடம்பெறாத அம்பேத்கரும் ‘கொள்கைத்தலைவர்கள்’ ஆனார்கள்.
2024, பிப்ரவரி 2க்கு முன்புவரை விஜய்க்கும் அவர் ரசிகர்களுக்கும் இருந்த ஒரே எதிரி அஜித்தும் அவர் ரசிகர்களும் மட்டுமே.
1925ல் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தொடங்கப்பட்டது. அதன் அரசியல் அமைப்பான ஜனசங்கம், 1980ல் பாரதிய ஜனதா ஆகி 1992ல் பாபர் மசூதியை இடித்து 1998ல் ஆட்சியைப் பிடித்து பல ஏற்ற இறக்கங்களைக் கண்டு, தொடர்ந்து இரண்டுமுறை ஆட்சியைப் பிடிக்கும்வரை கொள்கை எதிரியாக இல்லாத பா.ஜ.க, விஜய் கட்சியை ஆரம்பித்ததும் ‘கொள்கை எதிரி’ ஆகிவிட்டது.
ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்ட அதே 1925ல் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகமாகி அதிலிருந்து பிரிந்து 1949ல் தொடங்கப்பட்ட தி.மு.க 1967ல் ஆட்சியைப் பிடித்து பல வெற்றி தோல்விகளுக்குப் பிறகு 2021ல் வெற்றிபெற்ற மூன்றாண்டுகளுக்குப் பிறகு, விஜய் கட்சியை ஆரம்பித்ததும் ‘அரசியல் எதிரி’ ஆகிவிட்டது.
இப்படிப்பட்ட ஒரு விசித்திரமான சூழலில்தான் நாம் விஜய்யின் அரசியலை ஆராய வேண்டியிருக்கிறது.
விஜய் தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார் – கே.பி. முனுசாமி பேட்டி


