விஜய் தனது பேட்டியை ரொக்கார்டு செய்ய அனுமதிக்காத நிலையில், அதனை பெரிய சாதனை போன்று என்டிடிவி பேசுவது ஊடக அறம் கிடையாது என்று ஊடகவியலாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.

என்டிடிவி ஊடகத்திற்கு விஜய் பிரத்யேக நேர்காணல் அளித்துள்ள நிலையில், அதன் பின்னணி குறித்து விளக்கி ஊடகவியலாளர் செந்தில்வேல் வெளியிட்ட காணொலி பதிவில் தெரிவித்துள்ளதாவது:- என்டிடிவிக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் தன்னுடைய வழிகாட்டிகளாக எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் கலைஞரை தெரிவித்துள்ளார். கலைஞரை வழிகாட்டி என்று சொல்லிவிட்டு திமுகவை விஜய் கடுமையாக எதிர்ப்பது ஏன்? இதன் பின்னால் உள்ள நுண் அரசியலை பார்க்க வேண்டும். 45 நிமிடங்கள் இந்த நேர்காணல் நடைபெற்றதாக என்டிடிவி நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் இதனை ஆப் தி ரெக்கார்டு ஆக அவர் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் நடைபெற்ற என்டிடிவி கான்கிளேவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர்கள், நடிகர் கமல்ஹாசன் போன்ற தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால் விஜய் வர மாட்டார். நாம் தான் பனையூருக்கு தேடி போக வேண்டும். போனாலும் பேட்டியை ரெக்கார்டு செய்ய விட மாட்டார்கள். ஆனால் அவர்கள் விஜயோடு உரையாடி கொள்ளலாம். அப்படி விஜயோடு பேசியதையே சிலாகித்து ராகுல் கன்வால் உள்ளிட்ட 4 பேரும் பேசுகிறார்கள். கடைசி வரை பேட்டி எடுத்த வீடியோ வரவே இல்லை.

உலக தொலைக்காட்சிகளிலேயே இப்படி ஒரு நேர்காணலை எந்த தொலைக்காட்சியும் எடுத்திருக்க மாட்டார்கள். எந்த தலைவரும் இப்படியான நேர்காணலை கொடுத்திருக்க மாட்டார்கள். பாரம்பரிய மிக்க என்டிடிவி தொலைக்காட்சி, இப்படி ஒரு நேர்காணலை செய்திருக்க கூடாது. விஜய் பேட்டி அளிக்க விரும்பாவிட்டால், நட்பு ரீதியாக அவருடன் புகைப்படம் எடுத்து உங்களுடைய தனிப்பட்ட முறையில் உங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருக்கலாம்.
ஆனால் பாரம்பரியம் மிக்க என்டிடிவியில் எல்லாம் வரிசையாக நின்று எக்ஸ்க்ளுசிவ் பேட்டி எடுத்தது போன்றே, நீங்கள் என்ன கேள்வி கேட்டீர்கள்? அதற்கு அவர் என்ன பதில் அளித்தார்? என்று சிலாகித்து பேசியது பத்திரிகையாளர்களுக்கான ஊடக அறம் கிடையாது. மிகவும் வருத்தமாக உள்ளது. இதையே ரெக்கார்டு செய்து வெளியிட்டால் என்ன? பயம். விஜய்க்கு கோர்வையாக பேச வராது. ஒரே ஒரு செய்தியாளர் சந்திப்பை விஜயை நடத்த சொல்லுங்கள்.

இந்த பேட்டியை கூட ரெக்கார்டு செய்திருந்தார் என்றால்? விஜய் காலியாகி இருப்பார். ராகுல் போன்ற மூத்த பத்திரிகையாளர்கள், ஒரு பத்திரிகையாளராக மாறி 2 கேள்விகளை கேட்டால் முடிந்துவிட்டது. கரூர் சம்பவம் பற்றியோ, பாஜக பற்றியோ, ஜனநாயகன் பட விவகாரம் பற்றியோ இரண்டு கேள்விகள் கேட்டால் முடிந்துவிட்டது. அப்போது அவரால் பதில் சொல்ல முடியாது. அதன் காரணமாகவே பேட்டியை ரொக்கார்டு செய்ய வேண்டாம் என்று சொல்லியுள்ளார். விஜய், தமிழ்நாடு அரசியலில் ஜெயலலிதாவை தான் தன்னுடைய வழிகாட்டியாக கருதுகிறார். ஜெயலலிதா புகைப்படத்தை தான் செங்கோட்டையன் பாக்கட்டில் வைத்திருக்கிறார். அதற்கு காரணமாக ஜெயலலிதாவை போன்று வர வேண்டும் என்று தான் விஜய் நினைக்கிறார்.
சென்னை முழுக்க பெருவெள்ளம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் இறந்து போனார்கள். ஆனால் 11 நாட்களுக்கு பிறகு போயஸ்கார்டனில் இருந்து ஜெயலலிதா வெளியே வந்து ஆர்.கே.நகரில் பிரச்சாரத்துக்கு சென்றார். அதேபோன்று தான் விஜய். 41 பேர் கரூரில் இறந்தாலும் வெளியே வர மாட்டார். அப்படி தான் அவர் தன்னை வளர்க்கிறார். இந்த பாழாய் போன தமிழ் சமூகத்திற்கு அதுபோன்ற தலைவர்களிடம் அடிமையாக இருப்பதில் ஒரு சுகம். அதனுடைய நீட்சிதான் 41 பேர் இறந்த பிறகும் பிள்ளைகளை பறிகொடுத்தவர்கள் விஜயை நேரில் பார்த்தோம் என்று மகிழ்ச்சி அடைந்தது.

விஜய் அப்படி இந்த தமிழ் சமூகத்திற்கு என்ன செய்தார்? அவர் என்ன மொழிப் போராட்ட தியாகியா? இயற்கை சீற்றங்களின்போது களத்திற்கு வந்து நின்றாரா? கொரோனா பேரிடரின் போது ஏழைகளுக்கு உணவு அளித்தாரா? 10 பள்ளிகளை கட்டி, கட்டணம் இன்றி குழந்தைகளை படிக்க வைத்தாரா? நன்றாக நடனம் ஆடுகிறார். நன்றாக நடிக்கிறார். எல்லோரையும் சிரிக்க வைக்கிறார்.அதற்கு நீங்கள் பெரும் பணம் கொடுக்கிறீர்கள். அதை வைத்து பல கோடி சம்பாதித்து உள்ளார். நியாயமாக நீங்கள் தான் அவரை வாழ வைத்துள்ளீர்கள். அவர் எங்கேயும் உங்களை வாழ வைக்க வில்லை.
நன்றாக டான்ஸ் ஆடுகிறார் என்பதற்காக விஜய் நாடாளலாம் என ஒரு சமூகம் நினைப்பது அவமானமாகும். அப்போது நாட்டிற்காக சிறைக்கு சென்றவர்கள், போராடியவர்கள் யார்? செத்து போனவர்களுக்கு ஆறுதல் சொல்லவும் வர மாட்டார். அவர் வீட்டிற்கு போய் ஆறுதல் பெற்றுக்கொள்ள வேண்டும். பெரும் தலைவர்களுக்கும் வீட்டிற்குள்ளேயே தான் மரியாதை செலுத்துவார். பேட்டி எடுக்கப்போகிறவர்கள் கூட அவருடைய வீட்டிற்கு தான் போவார்கள். இதெல்லாம் தவறான முன்னுதாரணம் ஆகும். திருந்துவார்கள் என்று நம்புகிறோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


