ஆளுநர் Vs தமிழ்நாடு அரசு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்து போக செய்யும் விதமாக மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும், இது மிகவும் ஆபத்தானதாகும் என்று மூத்த பத்திரிகையாளர்ர தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்த விவகாரத்தில் அவரச சட்டம் கொண்டு வர முயற்சிப்பது மற்றும் ஆளுநர் ரவியின் டெல்லி பயணம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்ர தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்ன சொல்கிறார்கள் என்றால்? நாடாளுமன்றத்தின் வேலை சட்டங்களை இயற்றுவது. அதிகாரிகளின் வேலை அதனை செயல்படுத்துவது. தங்களின் வேலை சட்டங்களுக்கு வியாக்யானம் கொடுப்பது என்று சொன்னார்கள். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், நீதிபதிகள் இப்படியே சொல்லிக்கொண்டு போனால் நீதித்துறை வரம்பு மீறல் என்று புகார் வந்துவிடும் என்று நீதிமன்றத்திலேயே குறிப்பிட்டார். நீதித்துறை வரம்பு மீறல் எல்லாம் கிடையாது. எங்கள் வேலை என்பது சட்டங்களை வியாக்யானம் செய்து சமன் செய்து சீர்தூக்கி பார்ப்பதுதான் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. அதற்கு பிறகு தான் மத்திய அரசு பின்வாங்குகிறது. தற்போது பிற மதத்தினரை வக்புக்குள் சேர்க்கப்போவது இல்லை என்று சொல்கிறார்கள். தற்போது வக்பு திருத்த சட்டமே நீர்த்து போய்விட்டது. என்ன நோக்கத்துடன் சட்டத்தை கொண்டுவந்தார்கள். வக்பு சொத்துக்கள் அரசு மற்றும் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளன. அப்படி உள்ள நிலங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் உரிமை மத்திய அரசுக்கு உள்ளது என்பது எவ்வளவு தவறானது. அதை தான் நீதிமன்றமே கேட்கிறது. உச்சநீதிமன்றம் சில நேரங்களில் கடுமையான வார்த்தைகளை பிரயோகம் செய்யும். அது அவர்களது உரிமையாகும். இதற்காக அவரச சட்டம் கொண்டுவரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி கொண்டுவந்தால் அது பெரிய அபத்தமாகும்.
ஆளுநர் Vs தமிழ்நாடு அரசு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்து போக செய்யும் விதமாக அவசர சட்டம் கொண்டுவரப் போகிறார்கள் என்று செய்திகள் வெளியாகின்றன. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி அதே அமர்வில் தான் முறையிட முடியும். அப்படி முறையிட்டாலும் தீர்ப்பில் பிழை இல்லை என்றுதான் வரும். அதற்கு அடுத்த படியாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். மறுசீராய்வு மனுக்கு பெரிய அமர்வை கேட்க வேண்டும். இது பெரிய நடவடிக்கையாகும். இதனை தவிர்க்க மத்திய அரசு விரும்புகிறது. ஆளுநர் Vs தமிழ்நாடு அரசு விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கும் கால நிர்ணயம் செய்துள்ளது சரியான விஷயமாகும். ஆளுநருக்கு காலக்கெடு கொடுத்துவிட்டு, குடியரசுத் தலைவருக்கு கால அவகாசம் கொடுக்காவிட்டால் பயனில்லை. ஒரு விஷயம் நடைபெறுகிறது. அதை சட்டப்படி எதிர்கொள்ள முடியவில்லை. அப்படி முடியவில்லை என்கிறபோது இயல்பாகவே ஒரு அவசர சட்டத்தின் வாயிலாக அதை நீர்த்துப்போக செய்ய முயற்சிக்கிறார்கள்.
இந்த முயற்சியை காங்கிரஸ் கட்சியும் செய்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எம்.பி, எம்எல்ஏக்கள் தண்டனை பெற்றால், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் இருந்தது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது தண்டனை பெற்ற அடுத்த நிமிடமே பதவியை இழந்துவிட்டதாக தீர்ப்பு வழங்கினார்கள். மேல்நீதிமன்றத்தில் குற்றவாளி இல்லை என்று உறுதியானால் மட்டுமே மீண்டும் பதவிக்கு வர முடியும். அதை நீர்த்து போக செய்வதற்கான முயற்சிகளில் காங்கிரஸ் ஈடுபட்டது. அதை ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் கிழித்து எரிந்தார். அது மிகப்பெரிய சர்ச்சையாக இருந்தது.
குடியரசு துணை தலைவர் பதவி என்பது ஒரு அலங்கார பொறுப்பாகும். ராஜ்யசபாவின் தலைவர் என்கிற பொறுப்பை கடந்த அந்த பதவிக்கு என்ன சிறப்பு அம்சம் உள்ளது. ஆளுநர் பதவி நியமனப் பதவியாகும். உண்மையிலேயே அதற்கு எந்த சிறப்பு அந்தஸ்தும் கிடையாது. பெரிய மனிதர்கள் என்று சொல்லி யாரோ ஒருவரை திணித்துவிடுகிறார்கள். விஜயலட்சுமி பண்டிட், அந்த காலத்தில் ஆளுநர் பதவி தேவையற்றது என்று சொன்னார். அவரும் ஆளுநராக இருந்தவர் தான். பிரிட்டிஷ் காலத்தில் ஆளுநர்தான் ஆட்சி செய்து கொண்டிருந்தார். அதனால் ஆளுநர், பல்கலைக்கழக வேந்தர் ஆகினார். சுதந்திர இந்தியாவிலும் அதையே தொடர்கிறோம். பிரிட்டிஷ் சட்டங்களை மாற்றும் இவர்கள், இதை ஏன் மாற்ற மாட்டேன்கிறார்கள்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகம் வந்த போது அவரை சந்திக்க ஆளுநர் ஆர்.என்.ரவி நேரம் கேட்டிருந்தார். ஆனால் அவரை சந்திக்க அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை. அவர் மீது அமித்ஷா அதிக வெறுப்பில் உள்ளார். ஏனென்றால் குடியரசுத் தலைவர் விவகாரத்திற்கு முக்கிய காரணம் ஆர்.என்.ரவிதான். தமிழ்நாடு அரசு, ஆளுநரோடு பெரிய முரண்பாடுகளுக்கு எல்லாம் போகவில்லை. ஆளுநர் ரவி விவகாரத்தில் மசோதாக்களை நிலுவையில் வைத்திருந்தது மட்டும் காரணம் இல்லை. ரவியின் கருத்துக்களே தவறாகும். ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக வந்தவர், அந்த மாநில மக்களின் அடிப்படை உணர்வுகளுக்கு எதிராகவே பேசும் உரிமையை யார் கொடுத்தார்கள். இவருக்கு தமிழ்நாடு அரசியல் வரலாறு முழுமையாக தெரியுமா? ரவி மும்மொழி கொள்கை நல்லது என்கிறார்.

மகாராஷ்டிராவில் இந்தி கட்டாயம் என சட்டம் போட்டார்கள். இன்று அவர்களை தூக்கிபோட்டு மிதிக்கிறார்கள். ஆனால் நம்ம ஆளுநர் இருமொழி கொள்கை என்பது பிற்போக்குத் தனமானது. தமிழர்களை தவறாக வழிநடத்துகிறார்கள் என்கிறார். அப்போது ரவி மீதான வெறுப்புக்கு இந்த ஒரு விஷயம் மட்டும் காரணம் அல்ல. எல்லாம் சேர்ந்தது தான். ரவி ஏன் டெல்லிக்கு செல்கிறார் என்றால் அங்கே அவருக்கு கொட்டு விழப்போகிறது என்று தான் நினைக்கிறேன். நிதி மசோதாவை தவிர மற்ற அனைத்து மசோதாக்களையும் ரவி நிலுவையில் வைத்திருந்தார். கூட்டுறவு சங்கங்களின் ஆயுட்காலம் தொடர்பான மசோதா வரை நிலுவையில் வைத்துள்ளார். அதற்கும் ரவிக்கும் சம்பந்தமே இல்லை. இவ்வளவு பெரிய குழப்பத்திற்கு காரணமே ஆளுநர் ரவிதான். அதை மத்திய அரசும் இந்நேரம் புரிந்து வைத்திருக்கும். ரவியை கெட்அவுட் ரவி என்று சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு அமித்ஷா போய்விட்டார் என்று நான் நினைக்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.