காங்கிரஸ் கட்சியால் திமுக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படப் போகிறது என்பது அவர்களின் நடவடிக்களால் தெளிவாக தெரிகிறது என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


தமிழக அரசியல் நிலவரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது :- இந்தியா டுடே கான்கிலேவில் பங்கேற்க வந்த மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய், தவெக தலைவர் விஜயை அவருடைய வீட்டில் சந்தித்து பேசியுள்ளார். தான் பேட்டி எடுக்கவில்லை என்றும் அவர் சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார். கடந்த முறை என்டிடிவிகாரர்கள் செய்தது பிளாப் ஆகியதால், இம்முறை இந்தியா டுடே செய்யவில்லை. இந்தியா டுடே கான்கிளேவில் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என்று அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்று பேசினார்கள். நோட்ஸ் இல்லாமல் பத்திரிகையாளர்களிடம் பேசுகிறார்கள். காரணம் அவர்களுக்கு சப்ஜெக்ட் தெரியும்.
சப்ஜெக்ட் தெரியாமல் ஒருவர் வீட்டில் அழைத்து பேசுவது விஜய்தான். பத்திரிகையாளர்களான எங்களுக்கு உள்ள மரியாதை உங்களால் தான் கெட்டுப் போகிறது. தவெகவுக்கு ஆதரவாக பேசுகிற பத்திரிகையாளர்களுக்கும் தற்போது சிக்கல். ஒருவர் வீட்டை விட்டு வெளியே வராமல். உழைக்காமல் இருக்கும்போது அவருக்கு ஆதரவாக பேசுவது கடினமான வேலையாகும். என்ன விதமான அழைப்பு இது. விஜயை வீட்டில் போய் பார்ப்பது. மூத்த பத்திரிகையாளர்களிடம் இதுபோன்ற விஷயத்தை நான் எதிர்பார்க்கவில்லை.

பேட்டி என்பது வேறு. அல்லது வீட்டில் போய் பார்ப்பது என்றால் புகைப்படம் போட தேவையில்லை. ஷாருக் கான், அமீர்கான் போன்றவர்களிடம் புகைப்படம் எடுத்தால் இப்படிதான் போடுவீர்களா? அவர்கள் எல்லாம் நடிகர்கள் இல்லையா? விஜய் அரசியல் செய்யாமல் நடிகராக தான் இருக்கிறார். சர்தேசாய் முதலமைச்சர் வீட்டில் உட்கார்ந்து டிபன் சாப்பிட்டுக்கொண்டு பேட்டி எடுத்தவர். அப்படி இருந்தவர் விஜயை சந்தித்து, அவரை போன்று ஒரே மாதிரியான டீசர்ட்டை அணிந்து ஷுட்டிங்கிற்கு போஸ் கொடுப்பது போன்று உள்ளது மன வருத்தத்தை அளிக்கிறது. இந்தியா டுடே கான்கிளேவில் பேசிய தவெக செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்டு, தலைவர்கள் மக்களுக்காக பிரச்சாரத்திற்கு வருவதை விட, தலைவருக்காக மக்கள் பிரச்சாரத்திற்கு வருவார்கள் என்று கூறியுள்ளார்.
சென்னையில் தற்போது 55 சதவீதற்கு மேலாக வாக்குகள் பதிவாகவில்லை. இம்முறை வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. விஜயின் தாக்கத்தால் இளைஞர்கள் வாக்களிப்பார்கள். ஆனால் அவர்கள் வீடு வீடாக பிரச்சாரம் செய்வார்கள் என்று சொல்வது சாத்தியமற்றது. விஜயுடன் சேர்ந்ததால் பெலிக்ஸ் உடைய இயல்பு தன்மை கடினமாக மாறுகிறது. தவெகவில் இணைந்துள்ளதை செங்கோட்டையன் தனக்கு லாபம் என்று நினைக்கிறார். ஆனால் இந்த தேர்தலில் அவர் தோற்றுவிட்டால் அவருடைய 50 வருட பெரிய தலைவர் என்கிற பிம்பம் உடைந்துவிடும்.

தவெகவை வைத்து திமுகவிடம் காங்கிரஸ் பேரத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கூட்டணி முறிகிற இடத்திற்கு போய்விட்டதா? என்கிற சூழல் ஏற்பட்டிருக்கிறது. மாணிக்கம் தாகூர் டிவிட்டரிலேயே அரசியல் செய்து கொண்டிருக்கிறார். கூட்டணி ஆட்சியில் பங்கில்லை என்று முதலமைச்சர் பதில் சொன்ன பிறகு அவர் பேசுவது சரியானது இல்லை. இந்த கோபம் கண்டிப்பாக திமுகவினருக்கு வரும். நீங்கள் அமைதியாக இருந்தால் ஓரளவுக்கு சரியாகும். இதை யார் சொல்லி, யார் செய்கிறார்? என்று தெரியவில்லை. மாணிக்கம் தாகூர் அம்பாக இருக்கலாம். எய்தவர்கள் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்.
திமுகவினர் அதை தெரியாதது போன்று கடந்து செல்ல பார்க்கிறார்கள். இந்த விவகாரத்திற்கு முதல்வர் ஒரு தீர்வு கொடுத்திருக்கிறார். அதனுடைய நீட்சியாக எடப்பாடி பழனிசாமியும் ஆட்சியில் பங்கில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்று கூறிவிட்டார். எனவே சீட் பேரத்தை அதிகரிக்க இப்படி பேசுகிறார்கள். அமைச்சர்கள் ராஜகண்ணப்பன்,ரகுபதி போன்றவர்கள் காங்கிரஸ் குறித்து விமர்சித்துள்ளது திமுக, காங்கிரஸ் கூட்டணி உடையும் நிலைக்கு சென்றுவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. என்னை பொருத்தவரை பிரச்சினை இன்னும் அந்த அளவுக்கு போகவில்லை. ஆனால் இதை சரிசெய்யாவிட்டால் அந்த சூழலுக்கு சென்றுவிடும்.

கூர்ந்து கவனிக்கும்போது திமுக – காங்கிரஸ் கூட்டணி பிரிவிதற்கு வாய்ப்பு இல்லை என்று தான் தோன்றுகிறது.ஆனால் கூட்டணி ஜெல் ஆவதில் பிரச்சினை உள்ளது. திமுக தலைமையை வேதனைப்படுத்துவது வேறு. காங்கிரஸ் கூடுதல் இடங்களை வாங்கும்போது, அந்த தொகுதிகளில் உள்ள மாவட்ட செயலாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும். அவர்கள் தேர்தல் வேலை பார்க்க மாட்டோம் என்று முடிவு எடுத்தாலே காங்கிரசுக்கு பெரிய அடி காத்திருக்கிறது. இவர்கள் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டனர். இதனுடைய பாதிப்பு காங்கிரஸ் கட்சி இருக்கும். காங்கிரஸ் இல்லாவிட்டால் திமுகவுக்கு ஆட்சி கிடைக்குமா? என்பது தெரியாது. ஆனால் கண்டிப்பாக எம்எல்ஏக்கள் கிடைப்பார்கள். ஸ்டாலின் முதல்வர் ஆகத்தான் காங்கிரஸ் வேண்டும். இந்த அடிப்படையை புரிந்துகொள்ள வேண்டும். திமுகவின் உழைப்பு இல்லாவிட்டால் காங்கிரஸ்காரர்கள் எம்எல்ஏ கூட ஆக முடியாது.

பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன வியூகங்கள் பலமுறை தோல்வி அடைந்தவை. ஆனாலும் அவர்கள் நம்புகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம். ஹரியானா, பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்த்தபோது தோல்வி அடைந்தார்கள். உத்தரபிரதேசத்தில் தங்களின் பாரம்பரிய தொகுதியிலேயே ராகுல்காந்தி தோற்றுப் போனார். இவற்றை எல்லாம் கவனிக்காமல் யாரோ ஜோடாங்கர் போன்ற நான்கு பேர் சொன்னார்கள் என்று தமிழ்நாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்த பார்க்கிறார்கள். காங்கிரஸ் கட்சியால் திமுக கூட்டணிக்கு இந்த தேர்தலில் பெரிய பின்னடைவு காத்திருக்கிறது. அது தெளிவாக தெரிகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


