விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய தேரோட்டத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி பெருவிழா கடந்த 18ஆம் தேதி துவங்கி தொடர்ந்து 13 நாள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று மாலை 3 மணிக்கு பக்தர்களால் திருத்தேர் வட பிடித்து இழுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்நிலையில் திருத்தோட்டத்திற்கு வந்திருந்த வேலூர் பகுதி சேர்ந்த ஓய்வு பெற்ற தனியார் வங்கி மேலாளர் விநாயகம் (64) என்பவர் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில், காத்திருந்த பின்பு கருவறையில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தார். அப்போது ஏற்பட்ட உடல் சோர்வால் நிலை குலைந்து கருவறையை விட்டு வெளியே வந்தவர், மயங்கி அப்பகுதியிலே அமர்ந்த நிலையில் உயிரிழந்தார்.

இதேபோல் மேல்மலையனூர் தாலுக்கா கோடியகொள்ளை கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர், திருக்கோவிலுக்கு தேர் திருவிழாவுக்காக வந்திருந்த நிலையில் இவரும் கோயில்களாகத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு அங்கேயே மயங்கினார். அவரை செஞ்சி அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


