கோவில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானைத் தரிசனம் செய்தனர்.
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலம் என்ற சிறப்பைப் பெற்ற இக்கோயிலில் கடந்த 2008-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து, 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன. சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்ற கோயில் திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மகா கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதற்காக கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பங்கேற்று சிறப்பு யாகசாலை பூஜைகளை மேற்கொண்டனர்.
பூஜைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோயில் கோபுரக் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் சுமார் 15 டன் வண்ண மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் தென்னரசு, ரஞ்சித்குமார், மாவட்ட ஆட்சியர் சினேகா, சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் உள்ளிட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
18 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த மகா கும்பாபிஷேகத்தைக் காண காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கோயில் வளாகம் விழாக்கோலம் பூண்டது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானைத் தரிசனம் செய்தனர்.
