Homeசெய்திகள்ஆன்மீகம்சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு எண்ணிக்கை குறைக்க வேண்டும்

சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு எண்ணிக்கை குறைக்க வேண்டும்

-

சபரிமலையில் மண்டல காலத்தில் இன்று இரண்டாவது முறையாக சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது முன்பதிவு எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சபரிமலையில் மண்டல கால பூஜைகள் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு மண்டல கால பூஜை கடந்த 16 ஆம் தேதி துவங்கியது. துவங்கிய நாள் முதல் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்துள்ளவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 7,260 பேர்.

இந்த ஆண்டு மண்டல பூஜைக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருப்பது இது இரண்டாவது முறையாகும். தற்போது அதிக அளவு பக்தர்கள் வரக்கூடிய காரணத்தினால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி ஏற்படுவதாகவும் எனவே தற்போதுள்ள நடைமுறையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் இந்த எண்ணிக்கையை ஒரு நாளைக்கு 85 ஆயிரம் ஆக குறைக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிக அளவு பக்தர்கள் வரக்கூடிய காரணத்தினால் சபரிமலை நடை தற்போது காலை 3 மணிக்கு திறந்து பிற்பகல் ஒரு மணி வரையும், மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறந்து இரவு 11:30 மணி வரையும் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் நடை திறப்பு நேரத்தை அதிகரிக்க முடியாத நிலை உள்ளது. அதனால் முன்பதிவு எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ