தமிழகத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் ராமதாஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதால் அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாமகவுக்கு 5 எம் எல் ஏக்கள் உள்ளனர். இதில், ஜிகே மணி, அருள் ஆகியோர் ராமதாஸ் தரப்புக்கு ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் சிவகுமார், சதாசிவம், வெங்கடேசன் ஆகியோர் அன்புமணிக்கு ஆதரவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் அதிமுக கூட்டணியின் சார்ப்பில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதேவேலை ராமதாஸ் தரப்பு எந்தக் கூட்டணியை ஆதரிக்கப் போகிறது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்நிலையில் ராமதாசின் உதவியாளரான சுவாமிநாதன் சுயேட்சை வேட்பாளராக மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கூறியிருப்பதாவது, ” ஐயா ராமதாஸ் உத்தரவின் பேரிலேயே நான் வேட்புமனுவை தாக்கல் செய்தேன். எனக்கு பல்வேறு எம் எல் ஏக்களின் ஆதரவு உள்ளது. நாளை காலை 11 மணிக்கு எனது வேட்புமனு பரிசீலனைக்கு வருகிறது. அப்போது நிலைமை தெளிவாகும்” என்று தெரிவித்துள்ளாா்.
இதற்கிடையில், ஏற்கனவே அன்புமணி மற்றும் தம்பித்துரை ஆகியோர் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.
இந்த சூழலில் அன்புமணிக்கு எதிராக சுவாமிநாதன் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. எனினும், அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் அன்புமணி ராமதாஸ் போட்டியின்றி தேர்வாகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


