சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் மனித வள மேலாண்மைத் துறை சார்ந்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், முதலமைச்சர் தலைமையில் துறை வாரியாக இந்த ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


அதன் ஒருபகுதியாக இன்று மனித வள மேலாண்மைத் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் மற்றும் துறை சார்ந்த தலைமை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் முக்கிய அம்சங்கள்:
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாக அரசுத் துறைகளில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் விரைந்து நிரப்புவது குறித்து தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.
அடுத்து, நிதிநிலைக்கு ஏற்ப முன்னுரிமை அளிக்கும் வகையில் மாநிலத்தின் தற்போதைய நிதிநிலையைக் கருத்தில் கொண்டு, அவசியமான அரசு காலிப் பணியிடங்களை முன்னுரிமை அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி வாயிலாக நிரப்புவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
மேலும், யுபிஎஸ்சி (UPSC) தேர்வுப் பயிற்சிகள் மூலமாக இந்திய அளவிலான குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளுக்குத் தமிழக மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில், அவர்களுக்கான பயிற்சித் திட்டங்களை விரிவுபடுத்துவதிலும், கூடுதல் கவனம் செலுத்துவதிலும் உள்ள வழிமுறைகள் குறித்துப் பேசப்பட உள்ளது.
இறுதியாக, பயோமெட்ரிக் வருகைப் பதிவுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் (Biometric Attendance) வருகைப் பதிவு முறையை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக நடைபெறும் இந்த ஆய்வுக் கூட்டம், அரசு வேலைவாய்ப்பு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் சார்ந்த முக்கிய அறிவிப்புகளுக்கு வழிகோலும் என எதிர்பார்க்கப்படுகிறது.
