
2026 பண்டிகை காலத்தில் இந்திய வாகனச் சந்தையில் பயணிகள் (பெட்ரோல், டீசல்,சிஎன்ஜி) கார்கள் விற்பனை சற்று சரிவைக் கண்டிருந்தாலும், மின்சார வாகனங்களின் (EV) விற்பனை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு பண்டிகை சீசனில் மட்டும் மின்சார வாகனங்கள் 5 லட்சம் விற்பனையைக் கடப்பது இதுவே முதல் முறை என ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
ஒட்டுமொத்தச் சந்தையின் போக்கு: கடந்த ஆண்டு பண்டிகை காலத்தோடு ஒப்பிடுகையில், இந்த நவராத்திரி மற்றும் தீபாவளி காலத்தில் மட்டும் ஒட்டுமொத்த வாகனச் சில்லறை விற்பனை 2.21% வளர்ச்சி கண்டு 55,25,490 யூனிட்களாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு 54,05,956 ஆக இருந்தது.
பயணிகள் வாகனங்கள்: பயணிகள் கார்கள் விற்பனை 7.16% குறைந்து 7,48,616 யூனிட்களாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு 8,06,322 ஆக இருந்தது.
இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள்: இரு சக்கர வாகன விற்பனை 3.67% உயர்ந்து 43,13,276 ஆகவும், மூன்று சக்கர வாகன விற்பனை 5.32% அதிகரித்து 1,93,576 ஆகவும் உள்ளது.
வணிக மற்றும் இதர வாகனங்கள்: வணிக வாகனங்கள் 7.13% வளர்ச்சியுடன் 1,55,761 யூனிட்களாகவும், கட்டுமான உபகரணங்கள் 26.06% உயர்வும், டிராக்டர் விற்பனை 2.24% உயர்வும் கண்டுள்ளன.
நவராத்திரி முதல் தீபாவளி வரையிலான மாற்றம்: நவராத்திரி காலத்தில் விற்பனை மந்தமாகத் தொடங்கிய போதிலும், தனத்திரயோதசி மற்றும் தீபாவளி நெருங்கியபோது சந்தையில் வாகன விற்பனை வேகமான மீட்சி ஏற்பட்டதாக FADA தலைவர் சாய் கிரிதர் தெரிவித்துள்ளார். நவராத்திரி சமயத்தில் 18%-க்கும் மேல் சரிந்திருந்த பயணிகள் வாகன விற்பனை, பண்டிகை காலம் முடிவதற்குள் பாதிக்கு மேல் பற்றாக்குறையைக் குறைத்ததுடன், ஒட்டுமொத்தச் சந்தையையும் வளர்ச்சிக்கு இட்டுச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
மின்சார வாகனங்களின் அதிரடி வளர்ச்சி: இந்தப் பண்டிகை காலத்தின் மிகப்பெரிய திருப்புமுனையாக மின்சார வாகனப் பிரிவு திகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டின் 3,33,935 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், இந்த முறை 52.62% உயர்ந்து 5,09,667 மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
மின்சார இரு சக்கர வாகனங்கள்: 61.10% உயர்ந்து 3,30,846 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.
மின்சார கார்கள்: 72.91% வளர்ச்சி கண்டு 52,104 யூனிட்களாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 30,133 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
மின்சார மூன்று சக்கர மற்றும் வணிக வாகனங்கள்: மின்சார மூன்று சக்கர வாகனங்கள் 25.45% உயர்ந்து 1,20,330 ஆகவும், மின்சார வணிக வாகனங்கள் 154.56% என்ற அதிரடி வளர்ச்சியுடன் 6,387 யூனிட்களாகவும் விற்பனையாகியுள்ளன.
பண்டிகை காலத்தில் விற்பனையான கிட்டத்தட்ட 10 வாகனங்களில் ஒன்று மின்சார வாகனமாக இருந்திருப்பது, தூய்மையான மற்றும் நவீன பயண முறைகளை நோக்கி மக்கள் வேகமாக மாறி வருவதைக் காட்டுவதாக சாய் கிரிதர் சுட்டிக்காட்டியுள்ளார்.
https://www.apcnewstamil.com/news/india/mumbai-rs-53928-crore-underground-tunnel-road-project/251884
