சென்னை புறநகர் மழைநீரில் மிதந்து வருகிறது. நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு படு மோசமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சென்னை, சென்னை புறநகர் ஆவடி, தாம்பரம் ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மழை பெய்து வருகிறது என்பதைவிட மழை கொட்டி வருகிறது என்பதுதான் சரியாக இருக்கும். அந்த அளவிற்கு மழை பெய்து வருகிறது.
இந்த மழையில் கொரட்டூர் வீட்டுவசதி வாரியம் குடியிருப்பு, கொரட்டூர் ஆவின் சாலை போன்ற தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது. அதேபோன்று திருமுல்லைவாயல் சிடிஎச் சாலையில் பெரும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் போகமுடியாமல் தவித்து வருகின்றனர். ஆவடி மாநகராட்சி முழுவதும் பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் கீழ்கட்டளை நங்கநல்லூர் ஆதம்பாக்கம் மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
மடிப்பாக்கம், கீழ்கட்டளை சாலையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் இரு புறங்களின் தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கக்கூடிய மழை நீரால் வாகன ஓட்டுகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.
ஆவடி, பூவிருந்தவல்லி, போரூர், மாங்காடு, குன்றத்தூர், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மழை நீர் கால்வாய் பணிகள் ஓராண்டில் முடிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதில் 50 சதவீதம் பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கால்வாய் பணிகளை மேற்பார்வை செய்வதற்கு, வேலையை முடிப்பதற்கு போதுமான அதிகாரிகள் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில் நன்கு வேலை செய்யும் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது, ஒப்பந்ததாரர்களிடம் அதிகமாக எதிர்பார்த்தது போன்ற காரணங்களால் சென்னையில் பணிகள் தோய்வடைந்தது. அந்த பிரச்சனைகள் அனைத்தும் முதலமைச்சர் கவனத்திற்கு சென்றதும் தீர்க்கப்பட்டு பணிகள் வேகமெடுத்தது.
ஆவடியில் பொறியாளர் பிரிவில் ஒரே ஒரு (A.E) Assistant Engineer கூட இல்லாததால் பணிகள் முற்றிலும் முடங்கி போயுள்ளது. இப்படி மாநிலம் முழுவதும் நகராட்சி நிர்வாகத்தில் அமைச்சர் கே.என்.நேரு அலுவலகத்திற்கும் (CMA) நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கும் நிறைய முரண்பாடுகள் இருப்பதால் அந்த துறை சார்ந்த பணிகள் முடங்கி போயுள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.