கோடை வெப்பத்தில் தண்ணீரில்லா பந்தலை விளம்பரத்திற்காக திறந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள். ஒரு குடம் தண்ணீர் கூட வைக்காதது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
கோடை வெப்பத்தை தணிக்க திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் , அ.தி.மு.க.வினர் ஆங்காங்கே, தண்ணீர் பந்தல்களை திறந்து வருகின்றனர்.
சென்னை திருவொற்றியூரில் கடந்த சனிக்கிழமை அதிமுக கிழக்கு பகுதியில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாதவரம் மூர்த்தி என பத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தனர்.
திறந்து வைத்த நாளன்று, இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், மோர் மற்றும் குளிர்பான வகைகள் என்று மக்களுக்கு தடபுடலாக வழங்கப்பட்டன. ஆனால், அந்த தண்ணீர் பந்தல்களை அ.தி.மு.க., வினர் முறையாக பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, காலடிப்பேட்டை மார்க்கெட் எம்.ஜி.ஆர்., சிலை முன்பு அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல், தண்ணீர் இன்றியும், கூரைகள் பிரிந்த நிலையில் கந்தல் கோலமாக காட்சியளிக்கிறது.
அதேபோல், தாங்கல், ராஜாகடை உள்ளிட்ட பகுதிகளிலும் தண்ணீர் பந்தல்களில் தண்ணீர் இல்லாமல் உள்ளது. கோடை வெப்பத்தினால் தண்ணீர் குடிக்க வருபவர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
அரசியல் விளம்பத்திற்காக, ஒரே நாளில் தடபுடலாக செலவழித்து நிகழ்ச்சி நடத்தும் அரசியல்வாதிகள், தண்ணீர் பந்தல்கள் திறக்கின்றனர். அவசியத்தை உணராமலே, அதனை பராமரிக்காமல் ஒரு குடம் தண்ணீர் கூட வைக்காமல் விட்டுள்ள சம்பவம் வேதனை ஏற்படுத்தி உள்ளது.