சமீபத்தில் 45 காவல்துறை அதிகாரிகளை பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக இருந்த நரேந்திரன் நாயர் ஐஜியாக பதவி உயர்வு பெற்று மதுரை கமிஷ்னராகவும், தி. நகர் துணை ஆணையராக இருந்த ஆதர்ஷ் பச்சேரா அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு துணை ஆணையராகவும் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தெற்கு இணை ஆணையர் நரேந்திரன் நாயரின் இறுதி நாள் என்பதால், நேற்று முந்தினம் அண்ணாசாலையில் உள்ள பிரபல ஹோட்டலில் தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் வழியனுப்பும் நிகழ்ச்சியும், புத்தாண்டின் போது தெற்கு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிதற்காக காவல் ஆய்வாளர்கள் முதல் துணை ஆணையர்களுக்கு விருந்தளித்து பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அடையார் துணை ஆணையர் மகேந்திரன், இளையராஜா இசையில் வெளியான நின்னை சரணடைந்தேன் பாடலை பாடி அசத்தினார். இந்த பாடலை பாடியவுடன் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து காவல் அதிகாரிகளும் துணை ஆணையர் மகேந்திரனுக்கு பாராட்டை தெரிவித்தனர்.