சென்னை வடபழனியில் கார் கண்ணாடியை உடைத்து திருட முயற்சி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார் வயது 37. டிவிஎஸ் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு சாமி தரிசனம் செய்வதற்காக வடபழனி ஆண்டவர் கோயிலுக்கு குடும்பத்துடன் காரில் சென்றார்.
வடபழனி ஆண்டவர் கோயில் அருகே உள்ள அம்மன் கோயில் தெருவில் தனது காரை நிறுத்திவிட்டு சாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது ஒரு நபர் இவர் கார் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த லேப்டாப்பை திருட முயன்றார்.
இதைப் பார்த்த பொதுமக்கள் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து வடபழனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்தி விசாரணையில் திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த விவேகானந்தன் வயது 46 என்பது தெரியவந்தது.
திருச்சியில் இருந்து தனது உறவினர்கள் பிரதீப், தீபக் ,சபரி மதன் ஆகிய நான்கு பேருடன் சென்னை வந்து பெரிய மேட்டில் அறை எடுத்து தங்கி கைவரிசை காட்டி வந்துள்ளனர். சென்னையில் பூக்கடை , திருவல்லிக்கேணி, பாண்டி பஜார், அடையாறு, பல்லாவரம், குரோம்பேட்டை என 14 இடங்களில் கைவரிசை காட்டியுள்ளனர்.
10 ரூபாய் நோட்டை கீழே போட்டு உங்கள் பணமா? என கேட்டு கவனத்தை திசை திருப்பி திருடுவது, கார் கண்ணாடிகளை உடைத்து அதில் இருக்கும் பொருட்களை திருடுவது இந்த டீமின் ரெகுலர் ஸ்டைலாகும். டிப் டாப் உடை ,ரேபோன் கிளாஸ் என நவ நாகரிகமாக பந்தாவாக வலம் வருவதால் பொதுமக்கள் தங்களை சந்தேகப்பட மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் நம்பர் ஒன் என கூறப்படும் திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்கள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை டி நகரில் பழம்பெரும் நடிகை பானுமதியின் கவனத்தை திசை திருப்பி அவரது காரில் இருந்த பத்து லட்சம் மதிப்பிலான வைர நகைகளை திருடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த 150 குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக திருட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த திருட்டு கும்பலை சேர்ந்தவர்கள், அங்குள்ள ஒரு பிரசித்தி பெற்ற கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு, வீட்டிலிருந்து கிளம்பும்போது வாய்க்கரிசி போட்டுக் கொண்டுதான் கிளம்புவார்கள் என்பது தெரியவந்துள்ளது.