சென்னையில் இன்று அதிகாலை போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி சுட்டுக்கொல்லப்பட்டார்.
வடசென்னை பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் காக்கா தோப்பு பாலாஜி. இவர் மீது ராயபுரம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 58 கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வழக்கு ஒன்றில் தலைமறைவாக இருந்து வந்த காக்கா தோப்பு பாலாஜியை கொடுங்கையுர் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை வியாசர்பாடி பிஎஸ்என்எல் குடியிருப்பு பகுதியில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி பதுங்கியிருப்பதாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலிசார் அங்கு சென்று காக்கா தோப்பு பாலாஜியை பிடிக்க முயற்சித்துள்ளனர்.
அப்போது, போலீசாரை தாக்கிவிட்டு அவர் தப்பியோட முயன்றதால், போலிசார் தற்காப்புக்காக அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் காக்கா தோப்பு பாலாஜி உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சென்னையில் பிரபல ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.