வடசென்னை, ஆவடி, பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், காட்டுப்பள்ளியில் நாள்தோறும் 40 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. ரூ.4,800 கோடி மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்காக சென்னை குடிநீர் வாரியம் பன்னாட்டு அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் கடல்நீரைச் சுத்திகரித்து குடிநீராக மாற்றி, வடசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆவடி, பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் குடிநீர் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்களுக்கு அனுபவம் தொடர்பான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 5 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான திட்ட அறிக்கையை ஏற்கனவே தயாரித்த நிறுவனங்கள் மட்டுமே இந்த ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ரூ.4,800 கோடி மதிப்பீட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தக் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில், வடசென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் எதிர்கால குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8 ஆண்டுகளுக்குப் பிறகு கொரட்டூர் ஏரியில் குவிந்த இளஞ்சிவப்பு பிளமிங்கோ பறவைகள்!
