சென்னை விருகம்பாக்கம் வீடு, கோயம்பேடு டிராவல்ஸ் நிறுவனம், வானகரம், கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் ED ரெய்டு – வேப்பேரியில் உள்ள ரியல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவனத்திலும் சோதனை – துணை ராணுவப் படையினர் பாதுகாப்புடன் அதிகாரிகள் விசாரணை!
சுமார் ரூ.5,000 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்துள்ள BLM கூட்டுறவு சொசைட்டியின் தலைவர் பிரேம்குமாருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு, கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் டிராவல்ஸ் நிறுவனம், வானகரம், கொளத்தூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே வேப்பேரியில் உள்ள ரியல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவனத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ரூ.5,000 கோடி நிதி மோசடி புகார் – பிரேம்குமார் கைது!
BLM கூட்டுறவு சொசைட்டியின் தலைவர் பிரேம்குமார் மீது சுமார் ரூ.5,000 கோடி நிதி மோசடி தொடர்பாகப் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக கடந்த வாரம் வியாழக்கிழமை கோழிக்கோடு குற்றப்பிரிவு போலீசார் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து பிரேம்குமாரைக் கைது செய்தனர்.
கேரள மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தப் புகார் தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ள போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
நெஞ்சுவலி எனக் கூறி மருத்துவமனைகளில் சிகிச்சை!
கைது செய்யப்பட்டபோது பிரேம்குமார் நெஞ்சுவலி ஏற்படுவதாகக் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர் மூன்று மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனால் அவரை கேரளாவுக்கு அழைத்துச் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையே, அவரது உடல்நிலை குறித்து மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட போலீசார், ராயப்பேட்டை மருத்துவமனையில் இருந்து உடல்நிலைப் பயணத்திற்குத் தகுதியானது என்பதற்கான சான்றிதழைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் – கேரளாவுக்கு அழைத்துச் சென்ற போலீசார்!
தொடர்ந்து பிரேம்குமாரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய கேரள போலீசார், அவரை கேரளாவுக்கு அழைத்துச் செல்வதற்கான டிரான்சிட் வாரண்டைப் பெற்றனர்.
இதையடுத்து அவரை கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்றப் புகார் – களமிறங்கிய அமலாக்கத்துறை!
இந்த நிலையில், பிரேம்குமார் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று காலை சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை தொடங்கியது.
கோயம்பேட்டில் உள்ள டிராவல்ஸ் நிறுவனம், வானகரம் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் பிரேம்குமாருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இடங்களிலும் அதிகாரிகள் ஆவணங்கள் மற்றும் முக்கிய ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர்.
வேப்பேரி ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் ED சோதனை!
இதற்கிடையே சென்னை வேப்பேரியில் உள்ள ரியல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவனத்திலும் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
04.11.2026 அன்று காலை சுமார் 10.10 மணியளவில் இரண்டு வெள்ளை நிற இன்னோவா கார்களில் வந்த அமலாக்கத்துறை மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.
இந்த வாகனங்களில் மூன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் மூன்று CISF பாதுகாப்புப் படையினர் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேப்பேரி E.V.K. சம்பத் சாலையில் உள்ள 35/41 என்ற முகவரியில் செயல்படும் BRIOS PROPERTIES PVT LTD மற்றும் BRIOS FINVEST INDIA LTD நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல இடங்களில் சோதனை விரிவடைய வாய்ப்பு!
பிரேம்குமார் தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் சோதனைகளில் கிடைக்கும் ஆவணங்கள், நிதிப் பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தற்போதைய சோதனையில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் சென்னையின் பிற பகுதிகளிலும் சோதனை விரிவடைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரூ.5,000 கோடி நிதி மோசடி புகார் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடைபெற்று வரும் இந்த அமலாக்கத்துறை சோதனை சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
