108 பேரிடம் பணம் வசூலித்து தலைமறைவு – தனிப்படை போலீசார் நடவடிக்கை!
தண்டையார்பேட்டையில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டு சீட்டு நடத்தி 108 பேரிடம் ரூ.23.16 லட்சம் வசூலித்து மோசடி செய்துவிட்டு தலைமறைவான கணவன், மனைவி இருவரையும் சென்னை தனிப்படை போலீசார் கோயம்புத்தூரில் அதிரடியாகக் கைது செய்தனர்.

பண்டு சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பணம் வசூல்!
சென்னை தண்டையார்பேட்டை ரெட்டைக்குழி தெருவைச் சேர்ந்த பத்மாவதி என்பவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
இவரது வீட்டில் சமையல் வேலை செய்து வந்த அருள்லட்சுமி மற்றும் அவரது கணவர் பழனி ஆகியோர் கடந்த 2020ஆம் ஆண்டு தீபாவளி பண்டு சீட்டு நடத்துவதாகக் கூறி பத்மாவதி மூலம் பலரைச் சேர்த்துள்ளனர்.
ஆரம்பத்தில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் சீட்டுப் பணத்தை முறையாக வழங்கி பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளனர்.
108 பேரிடம் ரூ.23.16 லட்சம் மோசடி!
தம்பதியினர் மீது நம்பிக்கை ஏற்பட்டதால், பத்மாவதி தனக்குத் தெரிந்த மேலும் 108 பேரை பண்டு சீட்டில் சேர்த்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு சீட்டு முதிர்வடைந்தபோது, 108 வாடிக்கையாளர்களின் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டு சீட்டுப் பணமான மொத்தம் ரூ.23 லட்சத்து 16 ஆயிரத்தை வழங்காமல் அருள்லட்சுமி, பழனி தம்பதியினர் திடீரென தலைமறைவாகினர்.
இதனால் பணம் செலுத்தியவர்கள் பத்மாவதியிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டுத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்துள்ளனர்.
தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார்!
இதையடுத்து பாதிக்கப்பட்ட பத்மாவதி கடந்த ஆண்டு தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தம்பதியினரைத் தேடி வந்தனர்.
கோவையில் பதுங்கியிருந்த தம்பதி கைது!
தண்டையார்பேட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், அருள்லட்சுமி மற்றும் அவரது கணவர் பழனி ஆகியோர் கோவை மாவட்டம் சூலூர், சின்னியம்பாளையம் பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கோவை விரைந்த தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு!
கைது செய்யப்பட்ட அருள்லட்சுமி மற்றும் பழனி ஆகிய இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், பண்டு சீட்டு நடத்தி 108 பேரிடம் ரூ.23.16 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படும் தம்பதி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
