Homeசெய்திகள்சென்னைவிண்ணை முட்டும் விலைவாசி உயர்வு! விஜய் அரசுக்கு எதிராக மயிலாப்பூரில் சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம் –...

விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு! விஜய் அரசுக்கு எதிராக மயிலாப்பூரில் சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம் – ரேஷன் அரிசி தரம் குறித்தும் சரமாரி புகார்!

-

- Advertisement -

அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, பால், காய்கறிகள், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

we-r-hiring

இதன் ஒரு பகுதியாக, சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகே ஒன்றிய பாஜக அரசு மற்றும் தமிழக வெற்றிக் கழக அரசைக் கண்டித்து சிபிஐ தென்சென்னை மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் வகிதா நிஷாம், தென்சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே. சிவா உள்ளிட்டோர் பங்கேற்று, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

“விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த விஜய் அரசு தவறிவிட்டது!” – வகிதா நிஷாம்:

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் வகிதா நிஷாம், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விஷம் போல் உயர்ந்து வருவதாகக் குற்றம்சாட்டினார்.

விலைவாசி உயர்வுக்கு உக்ரைன் – ரஷ்யா போரை ஒன்றிய அரசு காரணமாகக் கூறி வருவதாகவும், வெளிநாட்டுப் போரை மட்டுமே காரணம் காட்டினால் இந்தியாவில் ஆட்சி அதிகாரம் எதற்காக என்றும் கேள்வி எழுப்பினார். வேலைவாய்ப்பின்மை காரணமாக ஏழ்மை அதிகரிப்பதாகவும், சந்தைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தமிழக வெற்றிக் கழக அரசும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகக் கூறிய அவர், தமிழ்நாட்டில் உணவுப் பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

மேலும், ஆவின் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளதாகவும், தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்குவோரின் எண்ணிக்கை 43 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொருளாதார வல்லுநர் பேராசிரியர் கலையரசன் விலைவாசி உயர்வு குறித்து கருத்து தெரிவித்ததற்காகக் கைது செய்யப்பட்டதாகக் கூறிய வகிதா நிஷாம், ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதிவிட்டு மட்டும் முதலமைச்சர் இருந்துவிடக் கூடாது என்றும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மாநில அரசு நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“எலிகள் சாப்பிட்ட அரிசிதான் ரேஷன் கடைகளில் விநியோகம்!” – எஸ்.கே. சிவா குற்றச்சாட்டு:

தொடர்ந்து பேசிய சிபிஐ தென்சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே. சிவா, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளின் பராமரிப்பு மற்றும் ரேஷன் அரிசியின் தரம் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

குப்பையில் கொட்டும் அளவுக்குத் தரமற்ற அரிசி ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படுவதாகவும், சில நியாயவிலைக் கடைகள் எலிகளின் கூடாரமாக மாறியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அரிசியின் தரம் குறித்து அமைச்சர் வெங்கடரமணனிடம் தெரிவித்தபோது, ரேஷன் அரிசி நன்றாக இருப்பதாகவும் தானும் அதையே சாப்பிடுவதாகவும் அமைச்சர் கூறியதாக எஸ்.கே. சிவா தெரிவித்தார். தரமற்ற அரிசியை மக்களிடம் திணிப்பதை ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார்.

தனது தொகுதியான மயிலாப்பூரில் உள்ள நியாயவிலைக் கடைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த அமைச்சர் முன்வரவில்லை என்றும், கடந்த ஆறு மாதங்களில் எத்தனை கடைகள் சீரமைக்கப்பட்டுள்ளன என்றும் கேள்வி எழுப்பினார்.

“ஆறு மாதங்களில் புதிய கட்டிடங்கள் எதுவும் கட்டப்படவில்லை!” – தமிழக அரசுக்கு கேள்வி:

தமிழக வெற்றிக் கழக அரசின் ஆறு மாத காலச் செயல்பாடுகளையும் எஸ்.கே. சிவா விமர்சித்தார்.

கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களையே தற்போதைய அரசு திறந்து வைத்து வருவதாகவும், புதிய கட்டிடங்களைக் கட்டி திறந்ததாகக் கூற முடியவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், அரசாங்கத்தைக் கேள்வி கேட்பவர்களைத் தரக்குறைவாகப் பேசுவதில் தவெகவினர் கவனம் செலுத்துவதாக விமர்சித்த அவர், பட்டினப்பாக்கம் மீனவர்களின் கோரிக்கைகளைக் கேட்க தமிழக அரசு முன்வரவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

எந்தப் பிரச்சினை குறித்துக் கேட்டாலும் முந்தைய ஆட்சியைக் காரணம் காட்டாமல், கடந்த ஆறு மாதங்களில் தற்போதைய அரசு என்ன செய்துள்ளது என்பதை விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பதாகவும் புகார்:

சென்னையில் போராட்டம் நடத்துவதற்கு ஒரு மாதமாக அனுமதி மறுக்கப்படுவதாகக் குற்றம்சாட்டிய எஸ்.கே. சிவா, ஜனநாயகத்தில் போராடுவது மக்களின் உரிமை என்றும் காவல்துறை அதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

விலைவாசி உயர்வு, ரேஷன் அரிசியின் தரம், நியாயவிலைக் கடைகளின் பராமரிப்பு மற்றும் மீனவர்களின் கோரிக்கைகள் எனப் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து தமிழக மற்றும் ஒன்றிய அரசுகளுக்கு எதிராக சிபிஐ நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்தனர்.

புழல் அருகே போக்சோ புகாரில் சிக்கி மருத்துவமனையில் இருந்து தப்பிய ஆட்டோ ஓட்டுநர் கைது! தனிப்படை போலீசார் அதிரடி

MUST READ