குன்றத்தூர் அருகே அடுத்தடுத்து வந்த இரு லாரிகளால் விபரீதம் – சாலையில் விழுந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு – குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணை!
சென்னை அருகே குன்றத்தூரில் ராபிடோ பைக் ஓட்டிச் சென்ற மதுரையைச் சேர்ந்த ஐ.டி. மாணவர், அடுத்தடுத்து வந்த இரண்டு லாரிகள் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த 26 வயது இளைஞர்!
மதுரை முல்லை நகரைச் சேர்ந்தவர் தனுஷ் (26). இவர் சென்னையில் உள்ள போரூரில் தங்கியிருந்து ஐ.டி. தொடர்பான பயிற்சி பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தனது செலவுகளைச் சமாளிக்கும் வகையில் பகுதி நேரமாக ராபிடோ பைக் ஓட்டி வந்துள்ளார்.
ராபிடோ சவாரி முடித்து திரும்பியபோது விபத்து!
இந்நிலையில், நேற்று இரவு ராபிடோ சவாரி ஓட்டுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் தாம்பரம் சென்ற தனுஷ், அங்கிருந்து 400 அடி வெளிவட்டச் சாலை வழியாகத் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது குன்றத்தூர் KKS ஃபுட்ஸ் டீக்கடை அருகே வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது அவரது இருசக்கர வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது.
இதில் நிலைதடுமாறிய தனுஷ், இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார்.
பின்னால் வந்த மற்றொரு லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே பலி!
அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு லாரி, சாலையில் விழுந்து கிடந்த தனுஷ் மீது எதிர்பாராதவிதமாக ஏறியது. இந்தக் கோர விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இளைஞரின் உயிரிழப்பு குறித்த தகவல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணை!
விபத்து குறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு விபத்து நடந்த விதம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்தில் தொடர்புடைய லாரிகள் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னையில் ஐ.டி. பயிற்சி பெற்று வந்த மதுரையைச் சேர்ந்த இளைஞர், பகுதி நேர ராபிடோ சவாரியின்போது சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
