அம்பத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் லெவல் கிராசிங் 6க்கு பதிலாக பாதசாரி கம் டூ வீலர் சுரங்கப்பாதை.
ரயில் பயணிகளின் பாதுகாப்பிற்காக, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் பிரிவில் சுரங்கப்பாதைகளை இயக்குவதன் மூலம் லெவல் கிராசிங்குகளை மாற்றும் பணியை மேற்கொண்டுள்ளது. இந்த பிரிவில் மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில்கள் 130 கிமீ வேகத்தில் இயக்கபடுகின்றது. வந்தே பாரத் போன்ற செமி அதிவேக ரயில்கள் இப்பிரிவில் இயக்கப்படுவதால் இப்பிரிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த மாற்றியமைக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக, அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே உள்ள LC எண். 6க்கு பதிலாக பாதசாரிகள் மற்றும் இரு சக்கர வாகன சுரங்கப்பாதை அமைக்கப்படும் பணி மற்றும் பட்டாபிராம் – நெமிலிச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே சிறிய சுரங்கப்பாதையின் (Limited Use Subway) கட்டுமானப் பணிகள் 04.11.2023 அன்று தொடங்கியது.
அம்பத்தூர் ரயில் நிலையத்தில் கட்டப்படும் பாதசாரி மற்றும் இரு சக்கர சுரங்கப்பாதையின் அளவு 5.0 மீ. x 2.75 மீ. இந்த கட்டுமான பணிக்காக மதிப்பிடப்பட்ட செலவு ரூ.9.50 கோடி. இத்திட்டப் பணிகள் மாநில அரசுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு 18 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பத்தூர், ஒரு முக்கியமான தொழில்துறை மையமாகவும், SG3 நிலையமாகவும், சென்னை நகரின் பரபரப்பான வணிக மையமாகவும் உள்ளது. நாள் ஒன்றுக்கு 7.77 லட்சம் பயணிகள் பயணிக்கின்ற பரபரப்பான ரயில் நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். எனவே, பாதசாரிகள் மற்றும் இரு சக்கர வாகன சுரங்கப்பாதைகளை வழங்குவதன் மூலம், விற்பனையாளர்கள், உள்ளூர் மக்கள், மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்களுக்கு சிரமமின்றி செல்ல பயனுள்ளதாக இருக்கும்.
விபத்து அபாயத்தை நீக்கும் நோக்கமாகக் கொண்டுள்ள இந்த சுரங்கப்பாதை அனைத்து பயணிகளுக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். சுரங்கப்பாதை பணி முடிந்தவுடன், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல்கள் குறையும். இதனால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்தின் தடையற்ற ஓட்டத்தை எளிதாக்கி பாதுகாப்பான பாதையை வழங்குவதுடன், அத்துமீறி விபத்துகளைக் குறைக்கும்.