ரவி மோகன் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பை பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ரவி தற்போது கராத்தே பாபு, பராசக்தி ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதேசமயம் தயாரிப்பாளராக உருவெடுத்த இவர், ப்ரோ கோட் எனும் திரைப்படத்தை தானே தயாரித்து, நடிக்கப் போகிறார். மேலும் யோகி பாபுவை வைத்து ‘ஆன் ஆர்டினரி மேன்’ என்ற படத்தை இயக்கவும் இருக்கிறார். இந்த இரண்டு படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் ரவி, கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிக்க உள்ள ப்ரோ கோட் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ கௌரி பிரியா, மாளவிகா மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது டெல்லியை சேர்ந்த மதுபான நிறுவனம் ஒன்று ‘ப்ரோ கோட்’ என்ற தங்களது வர்த்தக முத்திரையை இதுபோன்று படத்தின் தலைப்பாக பயன்படுத்துவதன் மூலம் தங்களது வர்த்தக உரிமைகளுக்கு சேதம் ஏற்படக்கூடும் என்று குறிப்பிட்டு அந்த டைட்டிலை பயன்படுத்தக்கூடாது என்று வழக்கு தொடர்ந்து இருந்தது. இதற்கு எதிராக ரவி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், ரவி மோகனின் ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் ‘ப்ரோ கோட்’ என்ற தலைப்பை பயன்படுத்த தடை விதிக்கக்கூடாது என்று டெல்லி மதுபான நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் ப்ரோ கோட் என்ற பெயருக்கு தங்களுடைய நிறுவனம் பதிப்புரிமை பெற்றதால் அந்த பெயரை பயன்படுத்தக்கூடாது என மதுபான நிறுவனம் ரவி மோகனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ரவி மோகன் ஸ்டுடியோஸ்-க்கு ப்ரோ கோட் என்ற பெயரை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ரவி மோகன் ஸ்டுடியோஸ் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டுமெனவும் இது தொடர்பான அடுத்த விசாரணையை வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தும் உத்தரவிட்டுள்ளது.


