நடிகர் துருவ் விக்ரம் சமீபத்தில் நடந்த பேட்டியில் மாரி செல்வராஜ் குறித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் மூலம் அறிமுகமான துருவ், விக்ரமுடன் இணைந்து ‘மகான்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இவர் பைசன் – காளமாடன் திரைப்படத்தில் கபடி வீரராக நடித்திருந்தார். கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். மாரி செல்வராஜின் மற்ற படங்களைப்போல் இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. அதாவது வலுவான திரைக்கதையை கொடுத்த மாரி செல்வராஜை மட்டுமல்லாமல் இந்த படத்திற்காக கடினமாக உழைத்த துருவ் விக்ரமையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்ட இந்த படம் தற்போது வரை ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நடிகர் துருவ் விக்ரம் சமீபத்தில் நடந்த பேட்டியில் மாரி செல்வராஜ் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “என் வாழ்நாளில் இது போன்ற ஒரு வெற்றியை நான் அனுபவித்ததில்லை. என் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் இப்படி ஒரு படத்தை எனக்காக கொடுத்ததற்காக இயக்குனர் மாரி சாருக்கு நான் உண்மையிலேயே நன்றி உள்ளவனாக இருப்பேன். சினிமாவுக்காக நான் என்ன செய்ய விரும்பினேனோ அதை அவர் ‘கிட்டான்’ மூலம் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
எனது 27 வருட வாழ்க்கையில், மாரி சாருடன் நான் கழித்த இந்த ஒன்றரை வருடங்களில் தான் அதிகமாக கற்றுக் கொண்டேன். வாழ்க்கையின் மிகப்பெரிய பாடங்கள் சிலவற்றை அவர் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார். அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது” என்று தெரிவித்துள்ளார்.


