நடிகர் ரியோ ராஜ், சிவகார்த்திகேயன் குறித்து பேசி உள்ளார்.
சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்தவர் ரியோ ராஜ். அதைத்தொடர்ந்து வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுத்த இவர், சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு ‘பிளான் பண்ணி பண்ணனும்’ என்ற படத்திலும் நடித்திருந்த இவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ‘ஜோ’ திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ரியோ ராஜுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அந்த வகையில் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் ரியோ ராஜ் தற்போது ஆண்பாவம் பொல்லாதது என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ரியோ ராஜுக்கு ஜோடியாக ‘ஜோ’ படத்தில் நடித்திருந்த மாளவிகா மனோஜ் நடித்துள்ளார்.
திருமணம் சம்பந்தமான கதைக்களத்தில் கலகலப்பான பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார். சித்து குமார் இதற்கு இசையமைக்க மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. மேலும் இந்த படமானது வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. அதே சமயம் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரியோ ராஜ் மேடையில் சிவகார்த்திகேயன் குறித்து பேசியுள்ளார்.
#RioRaj about #Sivakarthikeyan ❣️:
“#Sivakarthikeyan anna is the primary reason for our previous films and future endeavors..⭐ Thank you for your trust…”🤝pic.twitter.com/emVaqVzRYW
— Laxmi Kanth (@iammoviebuff007) October 27, 2025
அதன்படி அவர், “இந்தப் படம் மட்டும் இல்ல. இதற்கு முன்னாடி நாங்க பண்ண படமாக இருக்கட்டும், இதன் பிறகு நாங்கள் பண்ணப் போகிற படமாக இருக்கட்டும், அதற்கு எல்லாத்துக்குமே முழு, முதற்காரணம் சிவகார்த்திகேயன் அண்ணா தான். சிவகார்த்திகேயன் அண்ணா, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் போது கார்த்திக் வேணுகோபாலன் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்றால் ‘ஜோ’ல ஹரிஹரன் ராம் இல்ல, ‘ஸ்வீட் ஹார்ட்’ல ஸ்வினித் இல்ல, ‘ஆண்பாவம் பொல்லாதது’ல கலையரசன் தங்கவேல் இல்ல. எனவே முதல் நம்பிக்கையை வைத்த சிவகார்த்திகேயன் அண்ணாவிற்கு ரொம்ப நன்றி” என்று தெரிவித்துள்ளார்.


