ஆளுநர் உரையை நீக்குவது மட்டுமல்லாமல் ஆளுநர் பதவியையே நீக்க அனைத்து மாநில அரசுகளும் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.


சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை புறக்கணிப்பு செய்த விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உரையை புறக்கணித்து சென்றுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அவர் வெளியேறியதற்கான பல்வேறு காரணங்களை கூறியுள்ளார். இந்த அறிக்கை என்பது அவர் சட்டமன்றத்திற்குள் நுழைவதற்கு முன்பாகவே தயாரிக்கப்பட்டது ஆகும். அவர் ஆளுநர் ஆர்.என்.ரவி, ராஜ்பவனில் இருந்து புறப்பட்டு சட்டமன்றம் வந்தது. உரையை புறக்கணித்துவிட்டு திரும்பி சென்ற நேரம் மற்றும் அறிக்கை வெளியான நேரம் ஆகியவற்றை வைத்து பார்க்கிறபோது, இது வெகு முன்னதாகவே தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அறிக்கை என்று தான் நாம் சொல்ல வேண்டும். தனது வழக்கமான அரசியலை இன்றும் நடத்திவிட வேண்டும் என்கிற முன்முடிவோடு தான் ஆளுநர் இருந்துள்ளார். தேசிய கீதத்தை இந்த ஆண்டும் அவமதிப்பு செய்தது ஆளுநர் தான். அரசு மீது குற்றச்சாட்டு வைக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. ஆளுநர் அதை செய்யலாமா?. நயினார் நாகேந்திரனிடம் வழங்கி பேச சொல்லுங்கள். ஆனால் ஆளுநர் தான் விரும்புகிற கருத்துக்களை அவையில் சொல்ல அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை.

தேசிய சின்னம், தேசிய கீதம் பாதுகாப்பு தொடர்பான சட்டப்பிரிவுகளை தனது அறிக்கையில் நீட்டி முழக்குகிற ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கும் ஆளுநர் உரை, ஜனாதிபதி உரை குறித்த ஒற்றை பக்கத்தை படித்தீர்களா? உங்களுடைய எண்ணங்களை, ஆசைகளை பேசி, பதிவு செய்கிற அதிகாரம் உங்களுக்கு கிடையாது. தற்போது பாஜகவினர் தாவிக்கொண்டு வந்து ஆளுநரை பாதுகாப்பார்கள். அவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். இதேபோல் நாடாளுமனற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் மத்திய அரசு தயாரித்துக்கொடுத்த உரையை படிக்கிறபோது, அரசின் மீது குற்றச்சாட்டுகளை வைத்துவிட்டு உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றார் என்றால் இங்குள்ள பாஜக தலைவர்கள் வரவேற்பார்களா? மாநில அரசு தயாரித்துக்கொடுத்த அறிக்கையை தான் ஆளுநர் வாசிக்க வேண்டுமே தவிர அதை நீக்கவோ, சேர்க்கவோ அவருக்கு அதிகாரம் இல்லை. ஆனால் வலதுசாரிகள் ஆளுநர் தவறே செய்யதாது போலவும், அரசு அவரை அவமதிப்பது போலவும் திட்டமிட்டு பரப்புகிறார்கள்.

முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகள் தொடர்பாக கருத்துக்கள் இருந்தால் அரசுக்கு கடிதம் எழுதலாம். ஆனால் அரசியல் சேட்டை செய்யும் ஆளுநரை ஒரு துளிக்கூட நாம் மதிக்கக்கூடாது. தமிழ்நாடு தற்கொலை தலைநகரமாக இருப்பதாக குறிப்பிடப்படுகிறது என்று ஆளுநர் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. யாரோ சொன்னதை அல்லது நீங்கள் சொல்ல நினைப்பதை சொல்லி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களை, அவர்களின் உணர்வுகளை அவமரியாதை செய்யலாமா? தமிழ்நாடு அரசின் நிர்வாக தலைவரே ஆளுநர் தான். நீங்களே உங்களுடைய முகத்தில் கறி பூசி கொள்ளலாமா? ஆளுநரை உரையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் அது சாத்தியமற்றது. இருந்தபோதும் முதலமைச்சரின் எண்ணத்தை வரவேற்கலாம். ஆளுநர் பதவியே இருக்கக்கூடாது என்று சொன்னவர்தான் அண்ணா. அவருடைய வழிவந்த ஸ்டாலின் இதை கூறியுள்ளார். ஆளுநர் உரையை மட்டும் அல்ல, ஆளுநர் பதவியையே நீக்க அனைத்து மாநில அரசுகளும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற அட்டூழியங்கள் தொடரும்.

மகளிருக்கு எதிராக இவ்வளவு குற்றங்கள் நடைபெறுவதாக சொல்கிற ஆளுநர், அதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? 10க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பதவி காலியாக உள்ளது என்கிற வார்த்தை அவருடைய அறிக்கையில் இல்லை. அதற்கு ஆளுநரும் பாதி காரணம். ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யாமல் அரசியல்வாதி போல அவர் வைக்கிற குற்றச்சாட்டுகளை தான் நாம் விமர்சிக்கிறோம். பாஜக ஒட்டுமொத்தமாக ஆளுநர்களை முழுக்க முழுக்க அரசியல் செய்ய அனுமதித்துவிட்டது. அதன் உச்சபட்சம் தான் ரவி செய்தது. அவருடைய பதவிவக்காலம் முடிந்து, எந்த அடிப்படையில் பணியில் தொடர்கிறார் என தெரியவில்லை. அவரை மறுநியமனம் செய்தோ, பதவியை நீட்டித்தோ இதுவரை உள்துறை அமைச்சகத்தில் இருந்து அறிக்கை வரவில்லை. அப்போது அவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கிற மாண்பு இதுதான். இது குறித்து ரவி, மத்திய அரசை கண்டித்து உண்டா? ஒரு சாராசரி அரசியல்வாதியாக ரவி விமர்சனங்களை வைக்கிறபோது மாண்புகள் நிறைந்த ஆளுநர் பதவியை விமர்சிக்க வேண்டி வருகிறது. அதற்கான சூழலை உருவாக்கியது அவர் தான். ஆளுநரின் செயலை யார் ஆதரித்தாலும் அது தமிழ்நாட்டிற்கு செய்கிற துரோகமாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


