திமுக உடனான கூட்டணி விவகாரத்தில் சோனியாகாந்தி கடைசி நேரத்தில் தலையிட்டிருப்பதாகவும், அவர் எடுக்கும் முடிவை ராகுல்காந்தி உள்ளிட்ட யாராலும் மாற்ற முடியாது என்றும் பத்திரிகையாளர் நிரஞ்சன்குமார் தெரிவித்துள்ளார்.


திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தையின் தற்போதை நிலை குறித்து டெல்லியை சேர்ந்த தமிழ் பத்திரிகையாளர் நிரஞ்சன்குமார் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா? என்கிற கேள்வி எழுந்திருக்கும் சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பேச்சுவார்த்தை நடத்த ப.சிதம்பரத்தை கட்சி மேலிடம் அனுப்பியுள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி கிரிஷ் ஜோடாங்கரை திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழுவில் நியமித்தபோது பிரச்சினை தொடங்கியது. அவரிடம் பேச்சுவார்த்தை தொடக்கத்திலேயே கூட்டணி ஆட்சிக்குறித்து பேச வேண்டாம் என்று தலைமை அறிவுறுத்தியது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபோது எடுத்த எடுப்பிலேயே கூட்டணி ஆட்சி வேண்டும் என்று சொல்லிவிட்டார். அதற்கு பிறகு கிரிஷ் ஜோடாங்கரை சந்திக்க முதலமைச்சர் நேரம் ஒதுக்கவே இல்லை.
அவர் தொடங்கி வைத்த பிரச்சினை தற்போது இவ்வளவு பெரிய சிக்கலில் வந்து நிற்கிறது. இந்த நிலையில் சோனியா, ராகுல், மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கே.சி.வேணு கோபால் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளனர். முதலமைச்சரிடம் ப.சிதம்பரம் பேசிய கருத்துக்களின் அடிப்படையில் இன்று காங்கிரஸ் தலைமை முடிவுகளை அறிவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தரப்பில் எத்தனை சீட்டுகள், எத்தனை ராஜ்யசபா இடங்கள் தருவதாக சொன்னார்கள் என்று கேட்டு சொல்லும்படி தான் ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. கூட்டணி தொடர்பான இறுதி முடிவை எடுக்கப்போகும் உச்சபட்ச அதிகாரம் சோனியா காந்தியிடம் தான் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சோனியா காந்தியின் கரிசனம் உள்ளது. பீகார் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை, கடைசி வரை சோனியா காந்தியின் முடிவுக்காக காத்திருந்தார்கள். ஆனால் அவர் தலையிடவில்லை. அதன் காரணமாகதான் பெரிய அளவிலான குழப்பம் ஏற்பட்டது. ஆனால் தமிழ்நாடு விவகாரத்தில் சோனியா காந்தி மிகவும் அக்கறையுடன் செயல்பட்டுள்ளார். காணொலி காட்சி வாயிலாக பேசியுள்ளார். சிதம்பரத்திடம் இருந்து கிடைக்கும் தகவலுக்காக அவர் காத்திருந்தார். இந்த விவகாரத்தில் சோனியா காந்தி முடிவு எடுத்தார் என்றால் அதில் மாற்றுக் கருத்து யாரும் சொல்ல முடியாது.

ராகுல்காந்தியின் அனுமதி இன்றி கிரிஷ் ஜோடாங்கரோ, பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் பேச முடியாது. ராகுல்காந்தியிடம் விஜய் குறித்த இன்புட்கள் முன்பு இருந்தே திணிக்கப்பட்டு வந்தது. விஜய், காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால் 5 மாநிலங்களில் காங்கிரசுக்கு பலன் அளிக்கும் என்பது என்று நினைக்கிறார்கள். மற்றொன்று பாஜக, அதிமுக கூட்டணி பொருந்தாக் கூட்டணியாக உள்ளது. அதன் காரணமாக 2029 மக்களவை தேர்தலின்போது, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுகவை பிரித்து, காங்கிரஸ்- அதிமுக – தவெக கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்று ராகுல்காந்தியின் மனதை மாற்றியுள்ளனர். எனவே ஒரு மாற்றுக்கூட்டணியை முயற்சி செய்து பார்ப்போம் என்கிற முடிவுக்கு ராகுல்காந்தி வந்துள்ளார் என்பது தான் இவ்வளவு பெரிய சிக்கல்களுக்கு காரணம்.
அப்படியான சூழலில் இது தவறு என்று உணர்ந்துகொண்டு சோனியா காந்தி தலையிட்டுள்ளார். இவர்கள் ராகுல்காந்தியின் மனதை மாற்றிவிடலாம். ஆனால் முடிவு எடுக்கும் உச்சபட்ச அதிகாரம் சோனியாவிடம் தான் உள்ளது. பாஜக அரசியல் கட்சிகளை உடைத்து துண்டாக்குகிறது என்றால், காங்கிரஸ் உடனிருந்தே கூட்டணி கட்சிகளுக்கு துரோகம் செய்கிறார்கள். இரண்டு தேசிய கட்சிகளுமே, மாநில கட்சிகளுக்கு துரோகம் செய்கிறார்கள்.

கிரிஷ் ஜோடாங்கர் இனி பேச்சுவார்த்தை நடத்தமாட்டார், ப.சிதம்பரம் தான் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று சொல்வதன் மூலம் ராகுல்காந்தியின் முடிவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு முடிய வில்லை. ஆனால் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்கள். ஆனால் ராகுல்காந்தி எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். தமிழ்நாட்டை 4 மண்டலங்களாக பிரித்து ராகுல்காந்தி கலக்கப் போவதாக சொன்னார்கள். ஆனால் அப்படி என்ன செய்தார்கள் என்று காட்ட வேண்டும். எந்த கூட்டணியில் இல்லாவிட்டாலும் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடப் போகிறது. எனவே காங்கிரசுக்காக வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் அல்லவா?
மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு மரணத்தின்போது, ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாட்டில் தான் இருந்தார். அவர்கள் நினைத்து இருந்தால், ஹெலிகாப்டரில் கூட வந்திருக்கலாம். அப்படி வந்திருந்தால் எல்லா பிரச்சினைகளும் முடிந்திருக்கும். ஐதராபாத்தில் ஒரு நாள் முழுவதும் இருக்க முடிந்த ராகுல்காந்தியால் தமிழ்நாட்டிற்கு வர முடியவில்லை. அதேநேரம் ஐதராபாத்தில் விஜயின் பிரதிநிதிகள் ராகுல்காந்தியை சந்தித்து பேசியதாக கூறியது வதந்திதான். அப்படியான எதுவும் நடைபெறவில்லை.

திமுக தரப்பில் 25 இடங்களும், ஒரு ராஜ்யசபா இடங்களும் தரப்படுவதாக கூறப்படும் நிலையில், சோனியா காந்தி என்ன முடிவு எடுப்பார் என்று தெரியாது. அவர் தமிழ்நாடு விவகாரத்திற்குள் கடைசி நேரத்தில் தான் வந்துள்ளார். அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது போக போக தான் தெரியும். சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக கட்சியினரை சந்திப்பது கிடையாது. ராகுல்காந்தி, பிரியாங்கா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட சிலர் மட்டுமே அவரை சந்திக்க முடியும். இருந்தபோம் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடருவதற்கு தான் அதிக வாய்ப்புகள் உள்ளன.
விஜய் போன்ற நகடிகரை, சோனியாகாந்தி நம்புவாரா? என்பது சந்தேகமானதுதான். ஒருவேளை இந்த விவகாரத்தில் தான் தலையிட விரும்பவில்லை. ராகுல்காந்தி முடிவுப்படி செயல்படலாம் என்று சோனியா கைகழுவாத வரை காங்கிரஸ் – தவெக கூட்டணி வருவதற்கு வாய்ப்புகளே இல்லை. மல்லிகார்ஜுன கார்கே, அது குறித்து பேசக்கூட தயார் இல்லை. தன்னிடம் இந்த விவகாரத்தை கொண்டுவரவே கூடாது என்று அவர் சொல்லிவிட்டார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


