தலைவர் 173 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘கூலி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில் அடுத்ததாக ‘ஜெயிலர் 2’ படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இது தவிர ரஜினி, கமல்ஹாசன் உடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக பல தகவல்கள் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ரஜினி தனது 173-வது படத்தை சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. அதாவது கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ‘அருணாச்சலம்’ படத்தில் இணைந்த சுந்தர். சி – ரஜினி கூட்டணி பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைய இருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் தூண்டி உள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த படமானது கலகலப்பான ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக உருவாக இருப்பதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்தது இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாகவும் ஏற்கனவே தகவல் கசிந்த நிலையில் தற்போது இப்படம் தொடர்பான புதிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி வருகின்ற நவம்பர் மாதம் 7ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.


