பிரபல பாலிவுட் நடிகர் அஜித்தின் டேர் டெவில் படத்தில் இணைந்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு நடிகர் அஜித்தின் 64-வது படமாக உருவாகி வரும் திரைப்படம் ‘டேர் டெவில்’. இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். ‘குட் பேட் அக்லி’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அஜித் – ஆதிக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கமர்சியல் ஆக்சன் படமாக உருவாகும் இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து பிரபு, பார்த்திபன், ஸ்ரீலீலா, உன்னி முகுந்தன் ஆகியோர் நடிக்கின்றனர்.
மேலும், சிவராஜ்குமார் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கப் போவதாகவும் பேச்சு அடிபட்டு வருகிறது. ஷாலினி அஜித்குமார் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே இப்படத்தின் பூஜை சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், அதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. இந்தப் படத்தில் நடிகர் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் தான் நடிக்கிறார் போல் தெரிகிறது.
இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் தேஜ் சப்ரு இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘டேர் டெவில்’ படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளிவரும் என நம்பப்படுகிறது.
