நிதேஷ் திவாரி இயக்கத்தில் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான பிரம்மாண்ட திரைப்படம் ‘ராமாயணா’. இதில் ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்திருந்தனர்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தின் விஷுவல்ஸ் மற்றும் மேக்கிங் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதேசமயம், படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாகவும், ராவணன் கதாபாத்திரத்தை மிகைப்படுத்திக் காட்டியிருப்பதாகவும் ஒரு தரப்பினர் கலவையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இருப்பினும், பாக்ஸ் ஆபிஸில் வெளியான 20 நாட்களிலேயே உலகம் முழுவதும் ரூ.1,735 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இப்படம் சாதனை படைத்துள்ளது. ஆனால், ரூ.2,000 கோடி கிளப்பை நோக்கிய ‘ராமாயணா’வின் வேகம் தற்போது சற்று மந்தமடையத் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய மார்க்கெட்டில் வசூல் குறைந்து வருவதாலும், ஒட்டுமொத்த திரையரங்க இருக்கை நிரம்பும் விகிதம் 50 சதவீதத்திற்கும் கீழ் சரிந்துள்ளதாலும், புதிய படங்களின் வரவால் திரைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாலும் மீதமுள்ள ரூ. 265 கோடி இலக்கை எட்டுவது சவாலாக மாறியுள்ளது. இந்தி மற்றும் வெளிநாட்டு மார்க்கெட்டுகளை மட்டுமே நம்பி அந்த இலக்கை அடைவது கடினம் எனக் கூறப்படுகிறது. சுமார் ரூ. 2,000 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில், பாக்ஸ் ஆபிஸில் ரூ. 2,000 கோடி மைல்கல்லைத் தொடத் தவறினால், இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுப்பது கட்டுப்படியாகுமா? என்பது போன்ற கேள்விகள் எழும் எனக் கருதப்படுகிறது.
- Advertisement -
