பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
2027 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு பா. ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’, அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 3’, ‘பாக்கெட் நாவல்’ போன்ற படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. விஷாலின் ‘புருஷன்’ திரைப்படமும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இது தவிர பிரபல யூடியூபர் விஜே சித்துவின் ‘டயங்கரம்’ திரைப்படமும் 2027 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பண்டிகை வெளியீட்டை முன்னிட்டு திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம் பொங்கல் போட்டியிலிருந்து விலகுவது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. படக்குழு தரப்பிலிருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் புதிய ரிலீஸ் தேதி எப்போது வெளியாகும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க விஜே சித்துவே இந்த படத்தை இயக்கி நடித்துள்ளார்.
இந்த படத்தில் விஜே சித்து உடன் இணைந்து நட்டி, நிதின் சத்யா, ஹர்ஷத் கான், இளவரசு, காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் இதற்கு ஒளிப்பதிவு செய்ய சித்து குமார் இசையமைத்துள்ளார். காமெடி கலந்த ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், டீசரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
