நடிகர் யாஷ் ‘கேஜிஎஃப் 1’ மற்றும் ‘கேஜிஎஃப் 2’ படங்களின் மூலம் இந்திய சினிமா ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தார். அதற்கு பிறகு வெளியான ‘டாக்ஸிக்’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்தாலும், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதில் யாஷின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் திரைக்கதை பின்னடைவாக அமைந்தது. அதேசமயம், நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்த ‘ராமாயணா’ படத்தில் ராவணனாக மிரட்டியிருந்தார் யாஷ். அதில் அவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்படுவதோடு, பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படம் 1700 கோடிக்கும் அதிகமாக வசூலித்து கவனம் ஈர்த்துள்ளது.
இருப்பினும், ‘ராமாயணா 2’ படம் வருவதற்கு முன்பாகவே யாஷுக்கு ஒரு தனியொரு சோலோ ஹிட், அதாவது மாபெரும் பிளாக்பஸ்டர் படம் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது.
‘ராமாயணா 2’ படம் 2028 தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், அதற்கு முன்பே பாக்ஸ் ஆபிஸில் மீண்டும் தனது தனிப்பட்ட ஆதிக்கத்தை காட்ட ஒரு வலுவான சோலோ பான்-இந்தியா படம் அவருக்கு அவசியமாகிறது. ஏற்கனவே ‘கேஜிஎஃப் 3’ படத்தைக் கைவசம் வைத்திருக்கும் யாஷ், பி.எஸ். மித்ரன், ஹேமந்த் ராவ், ஹனுமா ரெடி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கசிந்தது. இருப்பினும் இனிவரும் நாட்களில் யாஷின் அடுத்த படம் என்னவாக இருக்கும்? என்ற தகவலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
