நடிகர் விஜய் சேதுபதி அரசியல் கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, எந்த மாதிரியான கதாபாத்திரங்களாக இருந்தாலும் தேர்ந்தெடுத்து அதில் கச்சிதமாக நடித்து அசத்தி விடுவார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்ததாக இவருடைய நடிப்பில் ‘ட்ரெயின்’, ‘இஞ்சி வெல்லம்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இந்நிலையில், ‘ட்ரெயின்’ படம் தொடர்பான புரொமோஷன் பணிகளில் விஜய் சேதுபதி ஈடுபட்டு வருகிறார். அப்போது அவரிடம் அரசியல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, அரசியல் சம்பந்தமாக பேசியது சர்ச்சைக்குள்ளானது. அவர் தமிழக முதல்வர் விஜயை குறிவைத்து பேசியது போல அனைவரும் தொடர்புபடுத்தி பேசி வந்தனர். ஆனால், அது வெறும் நிகழ்ச்சிக்காகப் பேசப்பட்டது என்ற விளக்கத்தையும் அவர் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விஜய் சேதுபதியிடம், “இந்த அரசியல் மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த விஜய் சேதுபதி, “எனக்கு அரசியல் கருத்துக்கள் சொல்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், ஆட்சியில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் நாகரிகம் இல்லை. மேலும், நாம் எல்லாவற்றையும் மிக நெருக்கமாகப் பின்தொடர வேண்டும். ஒரு விஷயத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் பொதுவான கருத்துக்களைச் சொல்வது பயனுள்ளதாக இருக்காது. என்னுடைய விமர்சனங்கள் இந்தப் படத்தைப் பாதிக்கக் கூடாது. இன்றைய சமூக வலைதளங்கள் அப்படி இல்லை. பதில்கள் பயனுள்ளதாக இருக்கப் போவதில்லை எனும்போது, ஏன் இந்த அரசியல் கேள்விகளைக் கேட்கிறீர்கள்?” எனத் தெரிவித்துள்ளார்.
