லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம், உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அர்ஜூன், த்ரிஷா, சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், மற்றும் திரைப்பட இயக்குநர்கள் மிக்ஷின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.
இத்திரைப்படம் கடந்த 19-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூலித்து லியோ திரைப்படம் சாதனை படைத்துள்ளது. நடப்பு வருடத்தில் முதல் நாளிலேயே 140 கோடி வசூலித்த முதல் திரைப்படம் லியோ என்ற பெருமையும் கிடைத்துள்ளது. இது மட்டுமன்றி இங்கிலாந்திலும் முதல் நாளில் மட்டும் 5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது லியோ திரைப்படம். மேலும், கடந்த 7 நாட்களில் 500 கோடிக்கு மேல் லியோ திரைப்படம் வசூலித்துள்ளது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ரசிகர்கள் மட்டுமன்றி லியோ படம் பார்த்த திரைப்பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.
லியோ படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வெற்றி விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய், நான் ரெடி தான் பாடலில் சில வரிகள் நீக்கப்பட்டதற்கு விளக்கம் அளித்திருந்தார். விரல் இடுக்குல தீ பந்தம் என்றால், சிகரெட்டாக தான் இருக்க வேண்டுமா? ஏன் அது பேனாவா இருக்கலாம் என்றும், ‘பத்தாது பாட்டில் நான் குடிக்க’ என்றால் அது கூலாக கூட இருக்கலாம் என்றும் தெரிவித்தார். சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.