சிரஞ்சீவியுடன் இணைந்து சரித்திர கதையில் த்ஷிஷா நடிப்பதால், குதிரையேற்றம் உள்பட பல பயிற்சிகளை கற்று வருகிறார்.
தமிழில் 2002-ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. இப்படத்தைத் தொடர்ந்து ஷ்யாமுடன் இணைந்து நடித்த லேசா லேசா திரைப்படமும் தமிழில் பெரிய ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து விக்ரமுக்கு ஜோடியாக சாமி படத்தில் நடித்த த்ரிஷா முன்னணி நடிகையாக குறுகிய காலத்திலேயே முன்னேறினார். பின் திரைவாழ்வில் அவருக்கு ஏறுமுகம் தான். கடந்த 21 ஆண்டுகளில் நடிகை த்ரிஷா, விஜய்யுடன் இணைந்து மட்டும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
ஆனால், தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த த்ரிஷாவின் திரைப்பயணம், மீண்டும் பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியின் மூலமாக சூடுபிடிக்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இறுதியாக விஜய் நடித்த லியோ படத்தில் இணைந்து நடித்திருந்தார். இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து த்ரிஷாவுக்கு தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும், பாலிவுட்டிலும் த்ரிஷாவுக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கி இருக்கின்றன.
அந்த வகையில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் புதிய திரைப்படம் விஷ்வாம்பரா. இதில் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பிலும் நடிகை த்ரிஷா கலந்துகொண்டார். சரித்திரக் கதை என்பதால், படத்திற்காக நடிகை த்ரிஷா பல பயிற்சிகளை எடுத்துக்கொண்டு வருகிறார். குதிரையேற்றம், வளரி சண்டை உள்ளிட்ட பயிற்சிகளை கற்று வருகிறார் நடிகை த்ரிஷா. கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் சிரஞ்சீவியுடன் இணைந்து நடிகை த்ரிஷா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.