சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராஸி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று அமரன் திரைப்படம் வெளியானது. முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரம்மாண்ட வெற்றி கண்டது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். அதே சமயம் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி எனும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னதாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி எனும் திரைப்படத்திலும் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், டான்சிங் ரோஸ் சபீர், வித்யூத் ஜம்வால் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் ஏ.ஆர். முருகதாஸின் மற்ற படங்களை போல் கமர்சியல் படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தூத்துக்குடி, சென்னை போன்ற பகுதிகளில் நடைபெற்றது. அதன் பின்னர் சில நாட்கள் பிரேக் விடப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான தகவலின்படி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது.
அதன்படி இன்னும் சில காட்சிகள் இலங்கையில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது. இதற்கிடையில் இப்படம் 2025 செப்டம்பர் 5 அன்று திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.