நடிகர் அருண் விஜய், இட்லி கடை படம் குறித்து பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். இவரது நடிப்பில் கடைசியாக ‘வணங்கான்’ திரைப்படம் வெளியானது. அடுத்தது ‘ரெட்ட தல’ திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இவர், தனுஷ் இயக்கி, நடித்துள்ள இட்லி கடை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து நித்யா மேனன், ராஜ்கிரண், சத்யராஜ், சமுத்திரக்கனி, ஷாலினி பாண்டே ஆகியோரும் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இப்படம் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து புதிய போஸ்டர்கள், பாடல்கள், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இந்நிலையில் இந்த படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் மதுரையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அருண் விஜய், “நான் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு சரியான நெகட்டிவ் ரோலை தேடிக்கொண்டிருந்தேன். அது இட்லி கடை படத்தில்தான் அமைந்தது. இந்த படம் என்னுடைய சினிமா கேரியரில் முக்கியமான படங்களில் ஒன்று. இதுபோன்ற கதையில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். இந்த படத்தின் மூலம் தனுஷ் சாருடன் பல மறக்க முடியாத அனுபவங்கள் கிடைத்துள்ளது” என்று பேசியுள்ளார். மேலும் நடிகர் தனுஷ், அருண் விஜய்க்காக அவருடைய ‘ரெட்ட தல’ படத்தில் ‘கண்ணம்மா’ எனும் பாடலை பாடி கொடுத்துள்ளார். இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.