டிசம்பர் மாதத்தில் முன்னணி நடிகர்களாக ரஜினி, சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் ஆகியோர் நடித்துள்ள திரைப்படங்களின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளன.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு இயக்கியுள்ள திரைப்படம் தான் லால் சலாம். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ரஜினியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. லால் சலாம் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது.
தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ், சிவராஜ் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார். இப்படம் மூன்று பாகங்களாக வெளியாக இருக்கிறது. முதல் இரண்டு பாகங்கள் 1940 மற்றும் 1990 களில் நடப்பது போன்றும் மூன்றாம் பாகம் தற்போது நடப்பது போன்றும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிசம்பர் மாத இறுதியில் நடைபெற இருக்கிறது.
அதேபோல், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் அயலான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியும் வரும் 26-ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 3 படங்களின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் அரங்கேற இருப்பதால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.