லோகேஷ் கனகராஜ் – ராகவா லாரன்ஸ் கூட்டணியில் உருவாகும் பென்ஸ் படத்தில் தனுஷ் பட நடிகை ஒருவர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது ரஜினி, நடிப்பில் கூலி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் தயாரிப்பாளராக உருவெடுத்த லோகேஷ், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தை தயாரிக்கிறார். இந்த படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சில் இணைந்திருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்க, சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் மாதவன் மற்றும் நிவின் பாலி ஆகியோரும் இந்த படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தனுஷின் வாத்தி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த சம்யுக்தா, பென்ஸ் படத்தில் இணைந்திருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இந்த படத்தில் மற்றுமொரு கதாநாயகி நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. இது தொடர்பான அப்டேட் இனிவரும் நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.