நடிகர் தனுஷ் நடிப்பில் ஏப்ரல் 30, 2026 அன்று வெளியாகவிருந்த “கர” (Kara) திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள “கர” திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை சேலம் பூவாய் அம்மன் படத்தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் வேங்கை அய்யனார் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “கர” என்ற திரைப்படத்தின் பெயரை மாற்றாமல் வெளியிடக் கூடாது என கோரப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டதாவது, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே “கரா” என்ற தலைப்பில் தங்களது படப்பெயரை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், அதே போன்ற பெயரில் தற்போது திரைப்படம் வெளியாக இருப்பதால் குழப்பம் ஏற்படும் என்றும், படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்ட போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்த “கர” திரைப்படத்தில் மமிதா பைஜு, கே. எஸ். ரவிக்குமார், கருணாஸ், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
