- Advertisement -
அஜித்குமாரை வைத்து இயக்கப்பட்ட கிரீடம் படத்தின் மூலம் இயக்குநராக கோலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குநர் ஏ.எல்.விஜய். இதைத் தொடர்ந்து முற்றிலும் நகைச்சுவை கதைக்களத்தில் பொய் சொல்லப் போறோம் படத்தை இயக்கினார். அடுத்து அவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் மதராசப்பட்டினம். ஆர்யா மற்றும் எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்தது. ஏ.எல்.விஜய்யின் திரை வாழ்வில் மட்டுமன்றி கோலிவுட்டிலும் ஒரு அடையாளமாக மாறியது. இதுவரை பார்த்திராத சென்னை எனும் மதராசப்பட்டினத்தை திரையில் காட்டி அசத்தினார் ஏ.எல்.விஜய்
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு ஹிட்டை கொடுத்தார் விஜய். அது தான் தெய்வ திருமகள். விக்ரம், அமலா பால், அனுஷ்கா ஆகியோர் நடிப்பில் வௌியான இத்திரைப்படம் திரையரங்குகளுக்கு சென்ற அனைத்து அப்பா மகள்களையும் கண்ணீர் மல்க கைதட்ட வைத்தது. இப்படத்தின் வெற்றி விஜய்யை ஒரு முன்னணி இயக்குநராக உயர்த்தியது. இதைத் தொடர்ந்து விக்ரமை வைத்து தாண்டவம், விஜய்யை வைத்து தலைவா என அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்தார்.