இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் – தீபிகா பல்லிகல் தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தங்களுக்கு பிறந்த மகளின் வருகை குறித்து சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள தினேஷ் கார்த்திக், குழந்தைக்கு ‘ராஹா’ (Raaha) எனப் பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தினேஷ் கார்த்திக் மற்றும் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் தம்பதிக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு கபீர், ஜியான் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. தற்போது இவர்களது குடும்பத்தில் ஒரு குட்டி தேவதை இணைந்துள்ளதை அடுத்து, இவர்களது இல்லம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.

தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ள தினேஷ் கார்த்திக்,”எங்கள் இதயத்தில் நன்றியுடனும், ஆசியுடனும் எங்கள் அன்பு மகளை இந்த உலகிற்கு வரவேற்கிறோம். கபீர் மற்றும் ஜியான் தங்களது குட்டித் தங்கையான ராஹா பல்லிகல் கார்த்திக்கை அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர்,”எனப் பதிவிட்டுள்ளார்.
வாழ்த்து மழை:
ஐபிஎல் 2026 தொடர் நெருங்கி வரும் வேளையில், ஆர்சிபி அணியின் ஆலோசகராகவும் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வரும் தினேஷ் கார்த்திக்கிற்கு கிரிக்கெட் வீரர்கள், விளையாட்டு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் குவித்து வருகின்றனர்.
விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த இந்த தம்பதி, தங்களது குடும்பத்தின் புதிய உறுப்பினருடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர்.
