நடிகர் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், படம் உலகளவில் 8 நாட்களில் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


ரூ.80 கோடியை கடந்த ‘மண்டாடி’
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘மண்டாடி’. எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
கடல் பின்னணியில் நடைபெறும் பாரம்பரிய படகு பந்தயத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் வாரத்திலேயே வசூலில் கவனம் பெற்றது.
8-வது நாளில் வசூல் எப்படி?
கிடைத்துள்ள பாக்ஸ் ஆபிஸ் கணக்கீட்டின்படி, 8-வது நாளில் இந்தியாவில் ‘மண்டாடி’ சுமார் ரூ.3.25 கோடி நெட் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் படத்தின் மொத்த நெட் வசூல் ரூ.57.30 கோடியாக உயர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கிராஸ் வசூல் சுமார் ரூ.67.03 கோடியாகவும், வெளிநாட்டு வசூல் சுமார் ரூ.12.90 கோடியாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் மொத்த வசூல் ரூ.79.93 கோடியை எட்டியுள்ளது.
படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதனிடையே, ‘மண்டாடி’ திரைப்படம் உலகளவில் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழுவான RS Infotainment சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது. இதையடுத்து அடுத்ததாக ரூ.100 கோடி வசூலை நோக்கி படம் பயணிக்கும் என படக்குழு குறிப்பிட்டுள்ளது.
இரண்டாவது வாரத்தில் படம் நுழைந்துள்ள நிலையில், வரும் நாட்களில் கிடைக்கும் வசூல் அதன் மொத்த பாக்ஸ் ஆபிஸ் எண்ணிக்கையை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
