அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படமான ‘ராக்கா’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராக்கா’ திரைப்படத்தில் மிருணாள் தாக்குர், ஜான்வி கபூர் உள்ளிட்டோரும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இப்படம் 2027-ம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துபாய் திட்டத்தில் மாற்றம்
அட்லீ – அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் ‘ராக்கா’ படத்தின் படப்பிடிப்பு, இதுவரை மும்பையில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்குகளில் நடைபெற்று வந்தது.
அடுத்தகட்டமாக படத்தின் முக்கியமான காட்சிகளை துபாயில் படமாக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக அந்தத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, துபாயில் நடத்தத் திட்டமிட்டிருந்த படப்பிடிப்பை ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், படப்பிடிப்புக்காக அல்லு அர்ஜுன் அடிக்கடி மும்பை மற்றும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டிய சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கின்னஸ் சாதனை படைத்த ‘ராக்கா’
‘ராக்கா’ திரைப்படம் படப்பிடிப்பிலேயே தொழில்நுட்ப ரீதியாகப் புதிய சாதனையைப் படைத்துள்ளது. நேரலை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் 37 நடிகர்களின் நடிப்பைப் பதிவு செய்து கின்னஸ் உலக சாதனையைப் பெற்றுள்ளது.
மேலும், உலகின் முன்னணி விஎஃப்எக்ஸ் நிறுவனங்களின் மேற்பார்வையில் இப்படத்தின் முக்கியக் காட்சிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆங்கிலம், கொரிய, சீன மொழிகளிலும் இப்படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன் – அட்லீ முதன்முறையாக இணைந்துள்ள இப்படம் குறித்த ஒவ்வொரு தகவலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.
அதிரடி காம்போவில் அஜித்தின் ‘டேர் டெவில்’…. தூள் பறக்கும் அப்டேட்ஸ்!
