நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த லைன் அப் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா, அடுத்தடுத்து பிரம்மாண்ட மற்றும் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களில் கைக்கோர்த்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து படைக்கத் தயாராகி வருகிறார். ஏற்கனவே சூர்யாவின் 47-வது திரைப்படமான சீன் திரைப்படம் வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. ஆவேஷம் பட புகழ் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இத்திரைப்படத்தைத் தொடர்ந்து, சூர்யாவின் 48-வது திரைப்படத்தை இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கவுள்ளார். ஜெய் பீம் படத்திற்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறது. பான்-இந்தியா அளவில் பிரம்மாண்ட படங்களைத் தயாரிக்கும் பிரபல ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதுமட்டுமன்றி, சூர்யாவின் 49-வது திரைப்படத்தை செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கவுள்ளதாகவும், அவரது மைல்கல் திரைப்படமான 50-வது திரைப்படத்தை கேப்டன் மில்லர் புகழ் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளதாகவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. சூர்யாவின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இனிவரும் நாட்களில் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவரும் என்று நம்பப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் சூர்யா, மணிரத்னம் இயக்கத்தில் தனுஷுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. இவ்வாறு பிரம்மாண்ட கூட்டணிகளோடு வரிசைகட்டி நிற்கும் சூர்யாவின் இந்த அடுத்தடுத்த படங்கள் திரையரங்குகளில் புதிய சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -
